13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

அமுல்படுத்தப்பட வேண்டிய 13ஆவது திருத்தம் பற்றி அரசாங்கத்தின் நோக்கம் என்ன?

13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதுவே தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் முன்வைக்கப்பட வேண்டிய தேவையாகவும் ஒருமித்த கோரிக்கையாகவும் உள்ளது என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

அத்துடன், “13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக அதலிருந்து சில அதிகாரங்களை நீக்குவதற்கே இன்றைய ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள்”, என்றும் சாடினார்.

கொழும்பு சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

புதிய அரசியல் சாசனம் விரைவில் வெளிவரலாம் என்ற கருத்து நிலவுகின்றது. எங்களுக்கு உண்மை என்னவென்று தெரியாது. இவ்விதமான சூழலில், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தும் நிலவுகின்றது. தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுதல், திட்டமிட்ட குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுதல் என இவ்விதமான நிலைமைகள் தொடர்கின்றன.

அரசாங்கத்தின் நோக்கம் என்ன? அவர்கள் என்ன செய்வார்கள் என்பது எவராலும் சொல்லமுடியாது. ஆனால் அவர்களின் போக்கு இறுகிவரும் கடும் போக்காக மாறும் என்று சந்தேகிப்பதற்கு போதுமானளவு இடம் உண்டு. என்னவிதமான நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டும்? பின்பற்றவேண்டும்? என்னவிதமான கோரிக்கையை விட வேண்டும் என்று ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்.

13ஆவது திருத்தச் சட்டம் இன்றுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதை நிறைவேற்றுவதற்கு பதிலாக சில அதிகாரங்களை அதிலிருந்து நீக்குவதற்குமான சூழல் நிலவுகின்றது. இவ்விதமான சூழலில் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இங்கு கூடியிருக்கிறார்கள். ஒற்றுமையான - ஒருமித்த கோரிக்கை தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் முன்வைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. எல்லோரும் எங்களுடைய கருத்துக்களை கூறினோம். எந்தவிதமான வேற்றுமையான கருத்துக்களும் இல்லை - என்றார்.


தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இம்மாதம் 21ஆம் திகதி கூட்டு தீர்மானம் எடுக்கும் நாள்.

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் கொழும்பில் சந்தித்துப் பேசி கூட்டு தீர்மானம் ஒன்றில் கைச்சாத்திடத் தீர்மானித்துள்ளன. கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஒழுங்கமைப்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், முதன்முறையாக நவம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டச் சந்திப்பை கொழும்பில் நேற்று நடத்தியது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்து கொண்டிருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவேறும் வரை – சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாக்கல் அமுலாகும்வரை- அதன் முதல்படியாக, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட வலுவான உடன்படிக்கையான இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வாக்களித்ததன்படி, 13, 16ஆவது திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், அடுத்த படிமுறையாக சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கோருவதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது. இதில், தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்திடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விசேடமாக, அனைத்து தமிழ் தரப்பும் ஒன்றுபட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதென்றும், இதற்காக தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமரை சந்திப்பதென்றும் திட்டமிட்டு, இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பம்பலப்பிட்டி, குளோபல் டவர் ஹோட்டலில் நடந்த நேற்றைய (13) கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், புளொட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஆர். இராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ். பிரதிநிதித்துவப்படுத்தி க.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கவில்லை. இதேநேரம், ரிஷாத் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.

13ஆம் திருத்தச் சட்டம்தான் தமிழ் பேசும் மக்களுக்கு பாதுகாப்பு - செய்தியாளர்களிடம் சி. வி. விக்னேஸ்வரன்

“தமிழ் பேசும் மக்களுக்கு தற்போது இருக்கும் ஒரேயொரு பாதுகாப்பு 13ஆம் திருத்தச் சட்டம்தான். இதை எடுத்துவிட்டால் எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாது போய்விடும்”, இவ்வாறு கூறியுள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரன்.

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் கொழும்பில் நேற்று நடத்திய சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், “தற்போது சட்டப்புத்தகத்தில் இருக்கும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகின்றோம். அது எங்களின் நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு பதிலான ஒன்றல்ல. சமஷ்டி ரீதியான நிரந்தரத் தீர்வு ஒன்றே எமக்கு தேவையாகவுள்ளது. அந்த நிரந்தரத் தீர்வு எடுக்கும் வரையில் நாங்கள் தற்போது இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரக் காரணம் என்னவென்றால் அது இல்லாமல் போய்விட்டால், இங்கு அதற்காகப் பாடுபடும் மக்களே இல்லாது போய்விடுவர்.

“எங்கள் காணிகள் பறிபோகின்றன. வாழ்வாதாரங்கள் பறிபோகின்றன. இந்தநிலையிலே நாங்கள் தற்போது இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது. அது 13ஆம் திருத்தச் சட்டத்திலிருந்துதான் வருகின்றது. அதை எடுத்துவிட்டால் எங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாது போய்விடும். தற்போது இருக்கும் ஒரேயொரு பாதுகாப்பு 13ஆம் திருத்தச் சட்டம்தான். விரைவில் ஓர் ஆவணத்தை தயாரித்து அதை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்” - என்றார்.

13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House