
posted 8th December 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் “நாடாளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு எனது கண்டனத்தை நான் இவ்வேளையில் பதிவு செய்கிறேன்.
எனது நண்பரான மனுஸ நாணயக்காரவுக்கு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தற்போது பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சில சிரேஸ்ட உறுப்பினர்களும் தொடர்புபட்டுள்ளார்கள்.
இதேபோன்ற சம்பவங்களுக்கு நானும் கடந்த காலங்களில் முகம் கொடுத்துள்ளேன். எனவே, இவை தொடர்பாக எதிர்க்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் நம்புகிறேன்.
அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமார விஜேரத்தன தொடர்பாக நாடாளுமன்றில் பின்வரிசை உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கூற்று தொடர்பாக, நான் ஒரு ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினியிடமும் ஏனைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இவ்வேளையில் மன்னிப்பைக் கேட்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி தொடர்பாக குறித்த உறுப்பினர் மிகவும் கீழ்த்தரமான கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், குறித்த உறுப்பினர் அவ்வாறான கருத்தை வெளியிடும்போது, அவரை சுற்றி அமர்ந்திருந்த உறுப்பினர்கள் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தமையானது, உறுப்பினரின் அந்தக் கருத்தைவிட கேவலமானது.
அந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினரின் தாய் மற்றும் சகோதரிகளிடமும் நாம் மன்னிப்பைக் கேட்ட வேண்டும். இவர்கள் மட்டுமன்றி, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பெண்களிடமும் நாம் மன்னிப்புக் கோர வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து குறித்த உறுப்பினரை இரண்டு வாரங்களுக்கேனும் நாடாளுமன்றிலிருந்து இடைநிறுத்தம் செய்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன். இதனை மேற்கொள்ளாது விட்டால் அது பிழையான உதாரணமாக மாறிவிடும் என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
வடக்கு - கிழக்கில் உள்ள தொழிற்சாலைகளை அரசாங்கம் புதுபிக்க வேண்டும் என்பதோடு, அங்கு புதிய தொழிற்சாலைகளையும் ஸ்தாபிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஏற்கனவே, தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான கப்பற்சேவையை மீள ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
அத்தோடு, மட்டக்களப்பு விமாநிலையம், பலாலி விமான நிலையங்களை மீள செயற்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்.
குறைந்தது பொலன்னறுவையிலிருந்து வரும் புகையிரதத்தையேனும் மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு கேட்டிருந்தேன். ஆனால், இவையெதுவும் இன்றுவரை நடக்கவில்லை.
பிரதேசங்களுக்கிடையில் ஒரு தொடர்பு இல்லாவிட்டால் எம்மால் பொருளாதார ரீதியாக எதனையும் செய்ய முடியாது. வடக்கு - கிழக்கில் உள்ள தொழிற்சாலையொன்றில் உருவாக்கப்படும் ஒரு தயாரிப்பை, இங்குள்ள துறைமுகத்திற்கு கொண்டுவரும்போது, அந்த தயாரிப்பில் உள்ள பெறுமதியே இல்லாது போய்விடும்.
வடக்கு - கிழக்கில் தொழிற்சாலைகளை உருவாக்குதாயின், ஒரு இணைப்பு இன்றி அவற்றை மேற்கொள்ள முடியாது. கிழக்கில் சில ஆடைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. எனினும், இந்தத் தொழிற்சாலைகளின் கிளைகள் இலங்கையின் ஏனைய இடங்களிலும் இருப்பதால்தான் அவை லாபகரமானதாக இயங்குகின்றன.
எனினும், புதிதாக ஒரு தொழிற்சாலையை இந்தப் பிரதேசங்களில் ஆரம்பிக்க வேண்டுமெனில், நிச்சயமாக போக்குவரத்து உள்ளிட்ட இணைப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்தியே ஆகவேண்டும்.
புன்னக்குடா எனும் பகுதியில் 260 ஏக்கரில், ஆடைத் தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்து.
புன்னக்குடா என்பது கிழக்கில் உள்ள மிகவும் அழகான கடல் பிரதேசமாகும். ஆனால், இங்கு இவ்வாறானதொரு தொழிற்சாலையை ஸ்தாபிப்பது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியம் என்பது விளங்கவில்லை.
மாறாக, இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தால் வரவேற்கத் தக்கதாக இருக்கும்.
அத்தோடு, வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ஸவையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் தோற்கடிக்க வேண்டுமென்றுதான் இந்த அமைச்சுக்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா எனும் சந்தேகமும் எமக்கு எழுகிறது.
ஏனெனில், நாட்டில் தற்போதைய நிலைமையில் இந்த இரண்டு துறைகளும் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளன. இவ்வாறான நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹாவில் அதிகூடிய விருப்பு வாக்கு பெறும் இவர்கள் இருவரின் செல்வாக்கையும் வீழ்த்த திட்டமிட்டுத்தான் இந்த அமைச்சுக்கள் வழங்கப்பட்டதோ என்றும் எமக்கு தோன்றுகிறது.
மேலும், நாட்டில் இன்று டொலர் வருகை இல்லாது போயுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், ஒரு நாடு - ஒரு சட்டம் எனும் செயலணியின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரர், நாட்டில் எவ்வேளையிலும் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என்று அரச ஊடகங்கள் முன்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். இங்குள்ள முதலீட்டாளர்கள், நாட்டுக்குள் வர அச்சப்படுகிறார்கள். காரணம், நாட்டில் எவ்வேளையிலும் குண்டுத்தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம். இந்நிலையில், எப்படி நாங்கள் வந்து முதலீடு செய்வது என எம்மிடம் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
ஒரு நாடு - ஒரு சட்டம் எனும் செயணி ஊடாக, இலங்கைக்கு வரவுள்ள டொலர்கள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்காலத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்மானால், இலங்கையில் எந்தவொரு வியாபாரமும் செய்ய முடியாத நிலைமையும் ஏற்படலாம்.
பாகிஸ்தானின் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரியந்த குமாரவுக்கு நிகழ்ந்த துன்பியல் சம்பவம் தொடர்பாக எனது கவலையை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களையும் கூறிக்கொள்கிறேன்.
இந்தச்சம்பவம் தொடர்பாக எமது இளைஞர்கள் இன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்ச்சியாக அனுதாபங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், அதேபோன்ற சம்பவங்கள் எமது நாட்டிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளமையை நான் இங்கு ஞாகப்படுத்த விரும்புகிறேன்.
1956- 57 களில் நடைபெற்ற கிளர்ச்சியின்போதும், இதற்கு சமமான சம்பவங்கள் இங்கும் நிகழ்ந்துள்ளன. அதுவும் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் தான் இவை நிகழ்த்தப்பட்டன.
குறிப்பாக தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1983 கலவரத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் நடு வீதிகளில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவை தொடர்பான புகைப்படங்கள் இன்றும் சம்பவங்களைப் பிரதிபலிக்கின்றன.
அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு யார் காரணம் என இங்குள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட தெரிந்திருக்கலாம்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கத்தை கொலை செய்தார் எனும் குற்றஞ்சாட்டுள்ள ஒருவர் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
பாகிஸ்தானில் இடம்பெற்றதைப் போன்று இலங்கையில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பே இருக்கவில்லை.
1948 முதல் 1978 வரையான காலப்பகுதியில் அரசியல் உரிமைக்காக தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளையே மேற்கொண்டார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்த காரணத்தினால்தான் தமிழ் இளைஞர்கள் அன்று ஆயுதம் ஏந்தினார்கள்.
ஆனால் பாகிஸ்தானில் இடம் பெற்ற இந்த சம்பவம் மத அடிப்படைவாதத்தினால் தான் இடம்பெற்றது என்று கூறலாம்.
ஆனால், ஒருநாடு - ஒரு சட்டம் என்பதன் ஊடாக இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கிழக்கு மக்கள் அனைவரும் இந்த செயலணிக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். ஒரு நாடு - ஒரு சட்டம் என்பதை வைத்து நாட்டை ஒருபோதும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ ஒருபோதும் நினைக்கவில்லை. மாறாக பொருளாதாரத்தை வளர்க்கவும், நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இணைந்து செயற்படத் தயார் என்பதையே கூற விரும்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House