
posted 7th December 2021
மன்னாரில் நாளாந்தம் பிரயாணிகளால் பேசப்பட்டுவரும் மன்னார் தீவின் நுழைவாயில் இராணுவ சோதனைச் சாவடியில் பிரயாணிகள் எதிர்நோக்கி வரும் அசௌரியங்களுக்கு விடிவு பிறக்குமா என்ற கேள்விக்குறியுடன் உள்ளுர் மற்றும் வெளியூர் பிரயாணிகள் தங்கள் பிரயாணங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இது விடயமாக பலரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் கொண்டு செல்லப்பட்டபோது, இக் குழுவானது அண்மையில் தள்ளாடி இராணுவ அதிகாரியையும் மன்னார் அரசாங்க அதிபரையும் நேரடியாகச் சந்தித்து இது விடயமாக கலந்துரையாடியது.
அத்துடன் இவ் விடயம் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (03.12.2021) சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளரை சுட்டிக்காட்டி தனது உரையில்;
மன்னார் மாவட்டத்தில் உள்ள நுழைவாயில் சோதனை சாவடியினால் மன்னார் தீவுக்குள் வருபவர்கள், வெளிச் செல்லுபவர்கள், அதாவது, அரச சேவையாளர்கள் முதல் சாதாரண பயணிகள் வரை அசௌகரியத்திற்கு ஆளாகின்றனர். மேலும், தென்பகுதிக்கு தமது மீன்களை கொண்டு செல்லுகையில் மீன்களை முழுமையாக இறக்கி சோதனைக்கு உள்ளாக்கப்படுவது வழக்கம். இவ்வாறு தேங்காய்கள் எல்லாம் முழுமையாக இறக்கப்படுகின்றது. இது தொடர்பாக நாம் இராணுவ அதிகாரிகளிடம் விசாரித்தால் போதை வஸ்து கடத்தலை காரணம் காட்டுகின்றனர்.
மன்னார் தீவாக இருக்கையில் கடற்படையினருக்கு தெரியாமல் எவ்வாறு மன்னாருக்குள் போதை வஸ்துக்கள் இங்கு கொண்டுவர முடியும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டு நிற்கின்றேன்.
சோதனை சாவடியில் மக்களைத்தான் அவதிபடுத்துகின்றார்கள். ஆனால், போதைவஸ்த்து வியாபாரிகள் தங்கள் தொழிலைத் திறம்படச் செய்கிறார்கள்.
கொழும்பில் அதிகமான போதைவஸ்துக்கள் பிடிக்கப்படினும், சோதனைச் சாவடிகளும் இல்லை. மக்கள் கஷ்டப்படுத்தப்படவுமில்லை.
ஆகவே பாதுகாப்பு செயலாளர் இதற்கென தனியான புலனாய்வு பிரிவு ஒன்றை உருவாக்கி வட பகுதியிலுள்ள போதைவஸ்து வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்களை கட்டுப்படுத்த முடியும்.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் எனக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை தந்து கொண்டிருக்கின்றார்கள்.
இது விடயமாக நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். இருந்தும் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பாக இன்று பேசப்படும் இந்த நேரத்திலும் இதனைச் சுட்டிக்காட்டுவது தவிர்க்க முடியாததொன்றாகும்.
எனவே, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமல்லாமல் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை முழுமையாக அறிய வேண்டும்.
நாங்கள் போதை வஸ்துக்களுக்கு எதிரானவர்கள். இதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என அவா கொண்டவர்கள். ஆகவே இதை தொழில் நுட்ப ரீதியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.
பாதுகாப்பு அமைச்சின் கூட்டம் ஒன்றில் நான் இந்த போதை வஸ்து தொடர்பான ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் தொடர்ச்சியாக அரச ஆதரவோடு இந்த தொழிலை செய்து கொண்டே இருக்கின்றார்.
ஆகவே, நான் கேட்பது பொதுமக்களைக் கஷ்டப்படுத்தும் இந்த சோதனைச்சாவடியை அகற்ற வேண்டும். இவ்வாறு அகற்றப்பட்டால் மக்கள் சுயமாக போக்குவரத்து செய்ய முடியும். அந்தோனியார் ஆலயத்துக்கு போகும் பக்கதர்களும் அமைதியாகப் போய் வழிபாடு செய்துவர உதவியாக இருக்கும் என்ற கோரிக்கைகளை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்தார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House