posted 13th December 2021
இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் பட்டம் வழங்கிக்கொள்பவர்கள் அதற்கு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்ந்திரன், அவர்களுக்கு தமிழர்களின் இன்றைய யதார்த்தநிலை புரியவேண்டுமென்பதுடன், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் குறித்தும் தெளிவு வேண்டும் என்றும் தனது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
1987ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையின் அரசியல் யாப்பில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவே இப்பொழுது அனைவராலும் பேசப்படும் 13ஆவது திருத்தமாகும். பதின்மூன்றாவது திருத்தம் வந்ததைத் தொடர்ந்து இலங்கையில் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாகவும், ஏனைய ஏழு மாகாணங்களை உள்ளடக்கி எட்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக டெல்லியில் தமிழ் தரப்புகளுடனான பேச்சுவார்த்தையில் வடக்கு-கிழக்கு என்பது எப்போதும் இணைந்திருக்கும் என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே தமிழர் தரப்புகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. பின்னர், பதின்மூன்றாவது திருத்தத்தைக் கொண்டுவந்தபொழுது இந்தியாவுடனோ தமிழர் தரப்புகளுடனோ சரியான பேச்சுவார்த்தைகளை நடாத்தாமல் ஜே.ஆர். ஜெயவர்த்தன தான் விரும்பியவாறு அரைகுறை அதிகாரப்பரவலாக்கலுடன் தமக்கு இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பயன்படுத்தி அந்தத் திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றினார்.
அப்பொழுது வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபையை உருவாக்கிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, பதின்மூன்றாவது திருத்தத்தில் இருக்கின்ற குறைகளைச் சுட்டிக்காட்டி அவை எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஓர் ஆவணத்தைத் தயார்செய்து அன்றைய ஜனாதிபதி திரு.பிரேமதாச அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கும் அனுப்பிவைத்தனர். அதேபோன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.அமிர்தலிங்கம் அவர்களும் பதின்மூன்றில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆகவே, பதின்மூன்றாவது திருத்தம் என்பது முழுமையான அதிகாரப்பகிர்வு அல்ல என்பதை தமிழர் தரப்பு அன்றே ஏற்றுக்கொண்டது. ஆனால் அது ஒன்று மாத்திரம்தான் தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்டபூர்வமான, அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களாக இருக்கின்றது. அதனை நடைமுறைப்படுத்தும்படிதான் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகளால் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
1950களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவாகிய பொழுது, தந்தை செல்வா அவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தார். 1976ஆம் ஆண்டுவரையில், அவரது சமஷ்டி கோரிக்கையில் எத்தகைய முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. தந்தை செல்வாவிற்கும் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் அரசதரப்பால் கிழித்தெறியப்பட்டன. இதன் காரணமாக பிரித்தானியரிடம் தமிழர்கள் இழந்த இறையாண்மையை மீளப்பெறுவதற்கான தமிழர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றபபட்டது. ஆனால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எத்தகைய பொறிமுறைகளோ, திட்டங்களோ, மூலோபாய, தந்திரோபாயங்களோ அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடம் இருக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளும், அழிப்புகளும் தமிழ் இளைஞர்களை ஒரு தற்காப்பு நிலைக்குத் தூண்டியது. இதன் காரணமாக, பல்வேறுபட்ட ஆயுத அமைப்புகள் தோற்றம் பெற்று, தமழின விடுதலைக்காக போராடின.
இந்த வரலாற்றைப் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லாதவர்கள், தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் என்று ஒருவருக்கொருவர் பட்டம் சூட்டிக்கொண்டும் புகழாரம் சூட்டிக்கொண்டும் தவறான கருத்துகளையும் அணுகுமுறைகளையும் தமிழ் மக்கள் மத்தியில் விதைக்க முயற்சிக்கின்றனர். 'பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி சில கட்சித் தலைவர்கள் பேசுவதாகவும் மகிந்த ராஜபக்சேவே பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மேலே சென்று இந்த பிரச்சினையைத் தீர்ப்பேனென்று பலமுறை கூறியதாகவும் ஆனால் அவற்றையெல்லாம் மறந்துபோன சில தமிழ்த் தலைமைகள் பதின்மூன்றை நிறைவேற்றும்படி இப்பொழுது கோரிக்கைகளை முன்வைப்பது என்பது தமிழருக்குச் செய்யும் துரோகம்' என்றும் இந்த சாணக்கியர்கள் 11.12.2021 அன்று சுண்ணாகத்தில் நடந்த சாணக்கியர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் கூறியுள்ளனர். இதே விடயத்தை இவர்கள் இலண்டனிலும் தெரிவித்திருந்தனர். மாகாணசபைகளுக்கு அரசியல் சாசன ரீதியில் வழங்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது தீருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திக்கொண்டு அதன் பிறகு சமஷ்டியை நோக்கி முன்னேற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் அரசியல் தலைமைகளின் இன்றைய நிலை. ஆனால் அரசாங்கம் அதனையே நடைமுறைப்படுத்த முடியாதென பிடிவாதம் பிடிக்கிறது. இந்த நிலையில் இந்த சாணக்கியர்களும் பதின்மூன்றை ஏற்கமாட்டோம் என்று கூறுவது இவர்கள் யாருடைய நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த சாணக்கியர்களின் சாணக்கியத்தை சற்றே திரும்பிப் பார்ப்போம்.
2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் அவசர அவசரமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளை சூட்டோடு சூடாக பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எமது மக்கள் அனுபவித்த கொடுமைகளை நேரடியாகவே கேட்டறிந்ததுடன், இது குறித்து ஐ.நாவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் கொடுப்பதற்காக விரிவான அறிக்கை ஒன்றையும் தயார் செய்திருந்தனர். இதனைக் கையளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஐ.நாவிற்குச் செல்லுமென்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று கூட்டமைப்பின் பேச்சாளராகவும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் இருந்த நான் இலங்கைக்கு வெளியில் இருந்த நேரத்தில் அமெரிக்கா ஜெனிவாவிற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தமது பயணத்தை ஒத்திவைத்ததாக தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தன்னிச்சையாக அறிவித்தார். ஆயினும் அதனை ஏற்க மறுத்து நாம் ஜெனிவா சென்று பல நாட்டு ராஜதந்திரிகளைச் சந்தித்து மக்களின் நிலை பற்றி தெளிவுபடுத்தினோம்.
2015ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்காளியாகத் திகழ்ந்த ரணில் - மைத்திரி கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றும் பொருட்டு, ஐ.நாவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட காத்திரமான தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதில் முனைப்புடன் செயற்பட்டவர்கள் இந்த சாணக்கியர்கள். இதற்கு இவர்கள் சொன்ன காரணம் விசித்திரமானது. சர்வதேச விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டது. இனி அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியதுதான் வேலை. எனவே நாம் பொறுமையுடன் இருந்து அதற்கான காரியம் ஆற்ற வேண்டும் என்று கூறியதுடன் சர்வதேச விசாரணையில் உள்ளுர் நபர்களும் இருப்பார்கள். அதே போன்று உள்ளக விசாரணைகளிலும் சர்வதேசத்தவர்களும் இருப்பார்கள் என்று வியாக்கியானம் அளித்தவர்கள், 2015ஆம் ஆண்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டாண்டுகள் அவகாசத்தையும் பெற்றுக்கொடுத்துவிட்டு, பின்னர் மீண்டும் 2017இல் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் மூலம்தான் நாம் அதனை சர்வதேசத்தின் பிடியில் வைத்திருக்க முடியும் என்று சொல்லி மீண்டும் காலநீட்டிப்பைப் பெற்றுக்கொடுத்தவர்கள்.
2018ஆம் ஆண்டில் அடுத்த சில மாதங்களில் புதிய அரசியல் யாப்பு வரப்போகின்றது. அதில் ஈழம் என்ற சொல்லைத் தவிர ஏனைய அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று கூறியதுடன் இந்த நேரத்தில் காரியத்தைக் கெடுத்து விடக்கூடாது என்று சொல்லி அன்றைய அரசாங்கத்தைக் காப்பாறற்றியவர்கள். அன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் யாப்பின் நகலை அனைவரும் அறிவோம். இதற்கு சமஷ்டிக்குள்ளும் ஒற்றையாட்சி அடங்கியிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்ளும் சமஷ்டி ஒளிந்திருக்கிறது என்று வியாக்கியானம் கூறியவர்கள்தான் இன்று தமிழ்த் தலைமைகளை விமர்சிக்கின்றனர்.
புதிய அரசியல் சாசன வரைபு தொடர்பில் நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் வடக்கு-கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே நாங்கள் அதுபற்றி பேசவில்லை என்றும் வடக்கு-கிழக்கை மதச்சார்பற்ற பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று கோரினால் சிங்கள பௌத்த மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் ஆகவே அந்த விடயங்கள் தொடர்பாக பேசவில்லை என்றும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பதில் சொல்லப்பட்டது.
யுத்தத்திற்குப் பிற்பாடு வந்த முதலாவது பாராளுமன்றத்தில், மகிந்தராஜபக்ச அரசுடன் பதினெட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். இந்தக் கூட்டங்கள் தோல்வியிலேயே முடிந்தன. ரணில்-மைத்திரி ஆட்சியில் பங்காளியாக இருந்துகொண்டு ஒவ்வொரு வருடமும் புதிய அரசியல் சாசனம் வருமென்றும் பொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு என்று உறுதிமொழி வழங்கிவந்தீர்கள். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இப்பொழுது கோத்தபாய அரசுடனும் பேசுவதற்கு முயற்சிக்கின்றீர்கள். ஆனால் சிங்கள பௌத்த தீவிரவாத எண்ணங்களைக் கொண்ட கோத்தபாய அரசு அதற்கான நேரத்தை இன்னமும்; உங்களுக்கு ஒதுக்கவில்லை. ஆனாலும் அவர்களுடன்கூட நீங்கள் பேசுவதற்குத் தயாராகத்தான் இருக்கின்றீர்கள். இப்பொழுது இறுதியாக நீங்கள் அமெரிக்கா, கனடா, இலண்டன் போய்வந்து '2022இல் மாற்றங்கள் நிகழலாம்...ம்...ம்' என்று கயிறு திரிக்கிறீர்கள். இந்த நிலையில்தான் விடுதலைப் புலிகள் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதற்குப் பின்னர் நடந்த யுத்தத்தில் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஆயுதப் போராட்டத்தை ஏற்காத நீங்களே இப்பொழுது அவர்களைத் துணைக்கு அழைக்கிறீர்கள். ஒரு இலட்சம்பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லும் நீங்கள் ஒரு இனவழிப்பு நடந்ததாகச் சொல்ல முடியாதென்றும் சொல்கிறீர்கள். இந்த சாணக்கியர்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவை மேவி வேறு எந்தவொரு நாடும் தலையிடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வரவிருக்கின்ற புதிய அரசியல் சாசனத்தில் பதின்மூன்றை முற்றாகவே நீக்கப்படலாம் என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. ஆகவே எமக்குக் கிடைத்த அதிகாரங்களை விட்டுக்கொடுப்பது என்ற முட்டாள்தனத்தை நாங்கள் செய்ய இயலாது. செய்யக்கூடாது.
கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று இதுவரை காலமும் கூறி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்த இந்த சாணக்கியர்கள் இப்பொழுது அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பதிமூன்றாவது திருத்தத்தை ஏற்கமாட்டோம் என்று கூறுவது இவர்களது சுயமுரணைக் காட்டுகிறது. இவர்களின் செயற்பாடுகள் இவர்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனாவாதிகளின் நிகழ்ச்சி நிரலையும் முன்னெடுத்துச் செல்லும் தரகர்களாகவே முன்னிலைப்படுத்தியிருக்கிறது. எனவே எமது மக்கள் இத்தகைய அரசியல் தரகர்களிடம் விழிப்புடன் செயற்பட்டு எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ் க.பிரேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
13.12.2021

எஸ். தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House