
posted 29th December 2021
“தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தமிழ் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு.”- சி. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக நேற்று அவர் அனுப்பி வைத்த பதிலிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அந்தப் பதிலின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
“எங்களுடன் சேர்ந்து பல தமிழ்க் கட்சிகள் அண்மையில் கூடி 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கும், எமது அரசியல் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கனவே இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கும் ஒரு சில சாதகமான விடயங்களை எமது தற்பாதுகாப்புக்காக பயன்படுத்துவதற்கு முயலும் ஒரு நடவடிக்கையே இது. இதனை நான் தற்போது மட்டும் கூறவில்லை. நான் முதலமைச்சராக இருந்தேபோதே, 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம், முதலமைச்சர் நிதியம் ஆகியவை தரப்படவேண்டும் என்று பல தடவைகள் வலியுறுத்தி இருந்தேன்.
நில அபகரிப்பு, போரின் பின்னைய வறுமை, சமூக சீர்கேடு, இராணுவ மயமாக்கல் ஆகியன காரணமாக ஆபத்தின் விளிம்பில் இருக்கும் எமது தேசத்தைப் பாதுகாப்பதற்கு சில நடவடிக்கைகளை நாம் அவசரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. “தீர்வு வரும், தீர்வு வரும்” என்று நாம் காலத்தை இழந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் நாம் எமது தேசத்தை இழந்துகொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை. ஆகவேதான் நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளும்வரையில் இருப்பவற்றைப் பாதுகாப்பதற்கு ஏற்கனவே சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முயற்சிக்க வேண்டியுள்ளது.
தற்போது எமக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் காலம் கனிந்துவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை இதனால்தான் வலியுறுத்துகின்றோம் என்பதுபோலவும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.
அன்றே, நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒற்றுமையுடன் நடவடிக்கை எடுத்து இருந்தால், இன்று மிகவும் பலமான ஒரு நிலையில் இருந்திருப்போம். அந்த நிலையில் நின்று கொண்டு எமது நிரந்தரத் தீர்வுக்காகப் போராடியிருப்போம். இன்று எமது நிலை மிகவும் வருத்தத்திற்குரியதாக மாறியுள்ளது. இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்து வந்துள்ளார்கள். எந்தவகையிலும், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோருவது எமது சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்கான கோரிக்கையை பாதிக்க முடியாது. ஆகவே, தவறுகளில் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தீர்வுக்கான எமது நடவடிக்கைகளும் ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எமது முயற்சிகளும் வெவ்வேறானவை. அவை சாமாந்திரமானவை, ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சந்திக்க முடியாதவை. 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் நான் முதலமைச்சராக இருந்திருக்கின்றேன். எமக்கு அமைச்சர்கள் இருந்தார்கள். பல நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இதற்காக எமது சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை ஒருபோதும் பாதிக்கப்படவில்லை. மாறாக, எனது பதவியைப் பயன்படுத்தி சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை நான் வலுப்படுத்தி இருக்கின்றேன்.
தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும். சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தமிழ் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு. இதனை நாம் தீர்மானிக்க முடியாது. எமது மக்களே தீர்மானிக்க வேண்டும். அதனால்த்தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நாம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம். இதனை இந்தியாவிடமும் நாம் வலியுறுத்தி உள்ளோம். மீண்டும் வலியுறுத்துவோம். ஆனால், சர்வஜன வாக்கெடுப்பு இன்று நடக்கும், நாளை நடக்கும் என்று எதிர்பார்த்திருந்து எமது நிலத்தையும் மக்களையும் நாம் இழந்துவிடக்கூடாது.
ஒவ்வொருநாளும் எமது நிலம் பறிபோகின்றது. பெருமளவில் எமது மக்கள் வெளியேறுகின்றார்கள். ஆகவேதான் ஏற்கனவே இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி சில வலுவூட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம், என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House