
posted 19th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வாகரை விபத்தில் கொல்லப்பட்ட 8 வயது சிறுவன்
மட்டக்களப்பு, வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியை கடக்க முற்பட்ட 8 வயது சிறுவன், வான் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை மீராவோடையைச் சேர்ந்த 8 வயது சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தான்.
இந்தச் சிறுவனுடன் அவனது தாயும் தந்தையும் ஓட்டோவில் நேற்று முன்தினம் இரவு பயணித்துக்கொண்டிருந்தபோது பனிச்சங்கேணி பாலத்தில் ஓட்டோவின் முன்பக்க மின்விளக்கு எரியாமல், பழுதடைந்துபோனதால், பாலத்தில் ஓட்டோவை நிறுத்திவிட்டு அதனை சிறுவனின் தந்தை சரி செய்துகொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் சிறுவனின் தாய் ஓட்டோவில் இருந்து இறங்கி பாலத்தின் எதிர்ப்பக்கமாக சென்றுள்ளார். அப்போது சிறுவன் வீதியின் குறுக்காக கடந்து தாயாரிடம் செல்ல முற்பட்டபோது வாகரையை நோக்கி பயணித்த வான் சிறுவனை மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுவன் வாழைச்சேனை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதனையடுத்து வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)