posted 22nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியா வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் உறவினர்கள் கூடி ஆர்ப்பாட்டம்
வவுனியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (20) மரணித்த சிசுவின் பெற்றோருக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டமானது வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக நேற்று (21) புதன்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது;
குழந்தையின் தாய் வலிதாங்க முடியாமல் பல மணிநேரங்கள் கதறியபோதும் அவருக்கு சிசேரியன் செய்யவில்லை. இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எப்படி செல்ல முடியும்.
குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கை இல்லை. எனவே சுகாதார அமைச்சினுடாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இதற்கான நீதியான விசாரணையினை மேற்கொள்ளவேண்டும். அதுபோலவே சிசுவின் சட்ட வைத்திய பரிசோதனையையும் கொழும்பு வைத்தியர்கள் மூலம் முன்னெடுக்கவேண்டும்.
அத்துடன் பொறுப்பே இல்லாத இந்த வைத்தியசாலைக்கு மூன்று பணிப்பாளர்கள், இரண்டு நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை.
எனவே இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்கும் வரை பொதுமக்கள் இங்கு மகப்பேற்றுக்காக வரவேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்று முன் தினம் மாலை சிசுவின் சடலத்தை வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் நீதிபதி பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)