
posted 22nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மன்னார் சிந்நுஜாவின் மரணம் ஐவர் பணியிடை நீக்கம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரியராஜ் சிந்துஜா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாகக் கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏலவே, நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எனினும் இதுவரை குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)