
posted 17th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி
உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்துக்கு பக்தர்கள் சென்று வழிபட நேற்று (16) வெள்ளிக்கிழமை முதல் இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
புகழ்பெற்ற கீரிமலை கிருஷ்ணர் ஆலயம் கடந்த 34 ஆண்டுகளாக இராணுவத்தின் பிடியில் உள்ளது. இதனால், இந்த ஆலயத்துக்கு மக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்திருக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (16) கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கவனிப்பாரின்றி பல ஆண்டுகள் காணப்பட்ட கிருஷ்ணர் ஆலயம் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. அங்கிருந்த சிலைகளும் உடைவுற்ற நிலையில் இருந்தன என்று நேற்று (16) வழிபட சென்ற மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த ஆலயத்துக்கு வருகை தந்து மக்கள் வழிபட முடியும் என்று படைத் தரப்பு அறிவித்துள்ளது.
இதேநேரம், போர் காலத்தில் வலி. வடக்கு பிரதேசத்தின் பெரும் பகுதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. போர் முடிந்த பின்னர் பல கட்டங்களாக மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன. எனினும், இன்னமும் பெரும்பகுதி நிலங்கள் இராணுவத்தின் பிடியிலேயே உள்ளன. இதில், தமிழ் மக்களின் காணிகள் மற்றும் புகழ்பெற்ற ஆலயங்கள் பல கவனிப்பாரின்றிய நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)