
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஓகஸ்ட் 30 போராட்டத்துக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்
“சர்வதேச சமூகத்தின் தலையீட்டை வலியுறுத்தி எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். எமது போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்று வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (06) செவ்வாய்க் கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
ஈழ மண்ணில் அரசாங்கத்தால் இனவழிப்பு நோக்கத்துக்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் விடுதலை மற்றும் நீதியை வலியுறுத்தி - சர்வதேச சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி - காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்துக்கு தாயகத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புகளும் பிரதிநிதிகளும் மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு அன்பாக வேண்டி நிற்கின்றோம் என்று கூறினர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)