
posted 3rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஈழத் தமிழ் அகதிகளை வெளியேற்ற இந்திய அரசு திட்டம் - பழ.நெடுமாறன்
“விசா அனுமதியோ அல்லது வேறு தகுந்த ஆவணங்கள் இல்லாமலோ நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியிருப்பதாகவும், அதற்குரிய விளக்கத்தை ஒருவார காலத்துக்குள் நேரில் வந்து அளிக்கவேண்டுமென தமிழகத்தில் அகதிகளாக வந்து தங்கியுள்ள ஈழத் தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்திலிருந்து முன்னறிவிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் அரசியல் குழப்பமும், கடும் பொருளாதார நெருக்கடியும் நீடிக்கின்றன. தமிழர் பகுதியில் சிங்கள இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருந்த ஈழத் தமிழ் அகதிகளை 1992ஆம் ஆண்டில் இதுபோல வெளியேற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்ட போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நானும், மருத்துவர் இராமதாஸும் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அகதிகளை வெளியேற்றும் முயற்சிக்குத் தடை விதித்தது. மேலும், அகதிகள் தாமாக தங்கள் நாட்டுக்குச் செல்ல விரும்புகிறார்கள் என்பதை இந்தியாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைய அதிகாரிகள் சரி பார்க்கவேண்டும். மேலும், எந்த அகதியையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதற்கு நிரந்தரத் தடையை உயர்நீதிமன்றம் 27.08.1992 நாளிட்ட ஆணையின் மூலம் உறுதி செய்துள்ளது.
எனவே, உயர்நீதிமன்ற ஆணைக்கு புறம்பாக அவர்களை வெளியேற்ற இந்திய அரசு முயலுவது மனிதநேய மற்ற செயல் மட்டுமல்ல, உயர்நீதிமன்றத்தின் ஆணையை மதிக்காதப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)