
posted 18th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதையுடன் இருவர் கைது
30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். இதுவே, அம்பாறை மாவட்ட வரலாற்றில் இதுவரை மீட்கப்பட்ட அதிக ஐஸ் போதைப்பொருளாகும்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப் பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேக நபர்கள் கல்முனை மாநகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் வைத்து வெள்ளிக்கிழமை (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பகுதியில் இருந்து கல்முனைக்கு நீண்ட காலமாக குறித்த போதைப்பொருட்கள் கடத்திவரப்பட்டுள்ளதுடன் 36 வயது மற்றும் 49 வயதுடைய கல்முனை, அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ஆடம்பர உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
குறித்த போதைப் பொருட்கள் பொலித்தீன் பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கடத்தி வரப்பட்டுள்ள நிலையில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இந்த சந்தேக நபர்களையும் சான்றுப்பொருட்களையும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒப்படைக்கவுள்ளனர்.
விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக் கட்டளை அதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் ஏ. எஸ். பி. குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான சம்பத் குமார, அசித ரணசூரிய ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர். ஏ. டி. சி. எஸ். ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)