
posted 13th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
22 சக மாணவர்களால் கூட்டு வன்புணர்வுணர்வுக்கு உள்ளான 16 வயது மாணவி
16 வயது மாணவியை அவரின் வகுப்பில் கல்வி கற்கும் 22 மாணவர்கள் இணைந்து கூட்டு வன்புணர்வு செய்ததுடன், அந்த மாணவியை மிரட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்புணர்வு செய்துள்ளனர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் மொனராகலை - தனமன்வில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில், 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பாதிக்கப்பட்ட மாணவியை சக மாணவன் காதலித்து வந்துள்ளார். காதலன் என்று கூறப்படும் மாணவன் அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரை நம்பி சென்ற மாணவிக்கு மதுவை கட்டாயப்படுத்தி பருக்கியுள்ளார் காதலன். இதன் பின்னர், அவரும் அவருடைய நண்பர்களும் கூட்டாக வன்புணர்ந்துள்ளனர். மாணவர்கள் இணைந்து இந்தச் செயலை செய்ததுடன், அதனை காணொலியாகவும் பதிவு செய்திருந்தனர்.
நடந்த சம்பவத்தை எவரிடமாவது கூறினால் காணொலியை சமூக ஊடகங்களில் வெளியிடுவோம் என்றுகூறி மிரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்தக் காணொலியை காண்பித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு மாணவர்களும் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்றும் மாணவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் காதலன் என்று கூறப்படும் மாணவனின் தாயார் ஓர் ஆசிரியையாவார். தந்தை தனமன்வில கல்வி வலயத்தில் கற்பித்தல் பயிற்றுவிப்பாளராவார். மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தை அறிந்திருந்தபோதும் அதனை, பாடசாலை நிர்வாகம் மறைத்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தமது பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் வந்து விடக்கூடாது என பாடசாலை அதிபர் மற்றும் ஒழுக்காற்று குழுவினர் இதை விசாரணை செய்யவில்லை என்றும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் சட்ட நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக கல்லூரியின் அதிபர் மாணவர்களின் பெற்றோர்களிடம் கடிதங்களை பெற்றிருந்தார்கள் என்றும், தனமன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், தற்போது பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், இந்த கொடூரமான சம்பவம் குறித்து தனமன்வில பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)