
posted 19th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் தமிழ் அரசு கட்சியினர் விலகி எம்முடன் இணையவேண்டும்
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினர் அதிலிருந்து விலகி வந்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புடன் இணைய வேண்டும். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலை (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம். பி.
செப். 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளரின் முதலாவது பரப்புரைக் கூட்டம் நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு - முள்ளியவளை - வற்றாப்பளையில் நடைபெற்றது. தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம். பி.,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்துதான் நம்பிய கொள்கைக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறினார். இதுபோல, தமிழ்ப் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினரும் அங்கிருந்து தைரியமாக விலகி தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் இணைய வேண்டும். விலகி வருபவர்களுக்கு மக்கள் அரணாக இருப்பார்கள்.
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். இலங்கை தமிழ் அரசுக் கட்சியினர் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் இணைவதன் மூலம் ஒரு குடையின் கீழ் நாம் நிற்க முடியும். எம்மைப் பிரித்தாளும் தந்திரத்தை தென்னிலங்கை செய்கிறது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தமிழ்ப் பொது வேட்பாளர் குறைந்தது 5 இலட்சம் வாக்குகளையாவது பெறவேண்டும். அப்போதுதான் நாம் தலைநிமிர்ந்துநிற்க முடியும். சர்வதேசத்துக்கும் சில விடயங்களை சொல்ல முடியும் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)