
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரன் அறிவிப்பு
நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு இன்று (08) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாட்டின் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வேணவாக்களை நாட்டுக்கும், சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் தனித்துவமான இனம் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை பறைசாற்றும் ஓர் அடையாளமாக தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எட்டப்பட்டது.
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவான தமிழ் மக்கள் பொதுக்கட்டமைப்பு என்பன இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்தன. இது தொடர்பான பேச்சுகள், உடன்படிக்கைகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழ் பொது வேட்பாளர் யார் என்பதைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் அண்மை நாட்களாக தீவிரமாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, இன்று (08) வியாழக்கிழமை தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இவர், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிழக்கு மாகாணத்தின் ஊடகவியலாளராக சிறிது காலம் பணியாற்றியவராவார்.
2004, 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தனர். இவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவர் என்பதுடன், அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராகவும் மத்திய குழு உறுப்பினராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டணியின் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ. பி. ஆர். எல். எவ்), தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பனவும் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் என்பன ஆதரிக்கின்றன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனது உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்னமும் விடுக்காத போதிலும் அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சிறீதரன் போன்ற முக்கிய தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)