
posted 22nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் கஜேந்திரன்
இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கு ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு ஒரு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கக் கோரி கிழக்கு மாகாணத்தில் துண்டுப்பிரசுர விநியோகம் நேற்று முன்தினம் (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கஜேந்திரன் எம். பி. மேலும் தெரிவித்தவை வருமாறு,
நாமல் ராஜபக்ஷ, தமிழர்களுக்கு உரிமை கொடுக்க மாட்டேன், அதிகாரங்களை கொடுக்க மாட்டேன், வடக்கு - கிழக்கை இணைக்க மாட்டேன் என்று சொல்லும் துணிச்சல் வந்திருக்கின்றது.
இனப் படுகொலையாளிகளை பாதுகாத்து விட்டதன் விளைவாகத்தான் அவர்கள் துணிச்சலாக எழுந்து நின்று இன்று நாமல் ராஜபக்ஷவை ஒரு வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள்.
நாமல் ராஜபக்ஷ வேட்புமனு தாக்கல் செய்யும் போது கோட்டாபய ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ இவர்கள் அனைவரும் அவரோடு நிற்கின்றார்கள் என்று சொன்னால் இவர்களை இவ்வளவு சுதந்திரமாக செயல்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)