
posted 18th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உருவானது 'இயலும் சிறீ லங்கா' கூட்டணி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பவர்கள் ஒன்றிணைந்து 'இயலும் சிறீ லங்கா' என்ற பெயரில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர்.
34 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த ஒப்பந்தத்தில் நேற்று (16) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கைச்சாத்திட்டனர். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மஹஜன எக்சத் பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்த்தன, ஈ. பி. டி. பி. கட்சி சார்பில் அதன் செயலாளரும் அமைச்சருமான கே. என். டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்), இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன், ஈரோஸ் கட்சியின் செயலாளர் ரா. பிரபாகரன், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ், ரிஷாத் பதியுதீன் கட்சியை சேர்ந்த எஸ். எம். எம். முஷாரப், அசாத் சாலி, அதாவுல்லா, ஏ. எச். எம். பௌசி, சிறீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி, சிறீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நிமால் சிறீபால டி சில்வா, மகிந்த அமரவீர, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, குமாரவெல்கம, ராஜித சேனாரட்ன, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வஜிர அபேவர்த்தன உள்ளிட்ட 34 தரப்பினர் இந்தப் புரிந்துணர்வில் நேற்று கைச்சாத்திட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக - சிலிண்டர் சின்னத்தில் களமிறங்குகிறார். இது அவரின் மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான அவர் கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை எதிர்த்து போட்டியிட்டார். சந்திரிகாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து எழுந்த அனுதாப அலையால் சந்திரிகா குமாரதுங்க வெற்றி பெற்றார்.
2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து ரணில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்ததால் ரணில் தோல்வியை தழுவியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)