
posted 1st August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ரவூப் ஹக்கீம் சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு
தமிழினத் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படும் மறைந்த மு.சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு விழா, அண்மையில் (20.7.2023), கரவெட்டியில் நடைபெற்றபோது , அதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு.
அண்ணன் சிவா என்கின்ற ஆலமரம், ஓர் அற்புதமான ஆளுமை. அவர் நாடாளுமன்றம் நுழைந்த 1960ஆம் ஆண்டில், நம் நாட்டு மண்ணில் பிறந்த அடியேனுக்கு இங்கு உரையாற்றும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றதையிட்டு புளகாங்கிதம் அடைவதைத் தவிர, வேறு எந்தப் பேறு நான் பெறமுடியும்.
அவருடைய சகவாசத்தினால் நாங்கள் அனுபவித்த சுகானுபவம் என்பது சாமான்யமான ஒரு விடயமல்ல. அவரை வெறும் வார்த்தைகளுக்குள் அடக்கிவிடமுடியாத அரும்பெரும் தலைவர் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டிய அவசியமில்லை.
உடுப்பிட்டிச் சிங்கமான மேடை அதிரப் பேசுகின்ற மேதாவிலாசம் வாய்க்கப்பெற்ற அந்தப் பெருமகனார் 1960ஆம் ஆண்டு பாராளுமன்றம் நுழைந்து, அடுத்த வருடமே யாழ்ப்பாண கச்சேரி முன்னால் தமிழரசுக் கட்சியினர் சத்தியாக்கிரகம் நடத்தியபோது, தான் ஒரு காங்கிரஸ்காரராக இருந்த நிலையிலும், அன்று எதிரும் புதிருமாக அரசியல் செய்த அந்த அற்புத ஆளுமை சத்தியாககிரகத்தின் போது தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மூன்று மாத காலம் முன் கொண்டு சென்ற அந்த சத்தியாக்கிரகத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு, தமிழ் அரசியலின் சமரச அந்த விருப்பத்திற்கு தன்னை முதலிலே அடையாளம் காட்டிய பெருமகனாரராவர்.
அவருடைய ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வு இவ்வளவு பெரிய முன்னுதாரணங்களை எங்களுக்கு தந்திருக்கிறது என்று நினைக்கின்ற போது, அண்ணன் சிவா என்கிற இந்த பெரிய ஆலமரம், இந்த விருட்சம் இவருடைய தார்மிகப் பண்புகள் இவற்றையெல்லாம் பட்டியல் போடப்போனால் இன்று பேசுவதற்கு நேரம் போதாமல் போகும்.
கொழும்பு, புலர்ஸ் ரோட் இல்லத்தில் அண்ணன் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் எந்தப் போராளிகளுக்காக அண்ணன் சிவா தன்னுடைய வாதத்திறமையை நீதி மன்றங்களிலும், வழக்காடு மன்றங்களிலும், வேறு பல இடங்களிலும், பொது மேடைகளிலும் முழங்கித் திரிந்தாரோ அதே போராளிகளின் துப்பாக்கி ரவைகள் அவரையும் பலி கொள்ள இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பி, அந்த விழுப்புண்களைத் தாங்கிய ஒரு வீர மகனாக அவரை இறுதியில் அதே இயக்கம் ஒரு விடுதலை வீரராக அங்கீகரித்தது மாத்திரமல்ல, 2001 ஆம் ஆண்டு அந்த இயக்கத்தின் மேற்பார்வையில் இன்று கரவெட்டி அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் தமிழ் தலைவர்கள் கேட்டு நிற்கின்ற அதே ஒற்றுமையை பலவந்தமாக ஏற்படுத்திய போது, அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவெடுத்த போது, அந்த கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் அந்தஸ்துக்கு தகுதியுள்ள ஒருவராக அதே இயக்கம் அவரை அடையாளப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய போது, அவர் சக்கர நாற்காலியிலே வந்து, ஒரு கட்சித் தலைவராக முன்வரிசையில் அமரவேண்டிய அந்தஸ்து இருந்த போதிலும், பின்வரிசை ஆசனமொன்றில் அமர்ந்து அவர் பேசிய போது முழு அவையும் அதிர்ந்து போன அவருடைய கர்ஜிக்கின்ற குரல் வன்மையை அன்றைய ஆட்சியை அமைத்தவர்களில் ஒருவராக நானும் முன்வரிசை ஆசனங்களில் அமைச்சராக இருந்த போது, அனுபவிக்க கிடைத்தது என்கிற அந்த ஆனந்தம் ஒரு சாமான்யமான விடயமல்ல.
19 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவருடைய அந்த குறுகிய பாராளுமன்ற வாழ்வு ஆறே ஆறு மாதங்கள் என்று நான் நினைக்கிறேன். அந்த ஆறு மாதங்களுக்குள் எப்போதாவது அபூர்வமாக அவர் பேசுகின்ற போது சபையே அதிர்வது மாத்திரமல்ல அமைதியாக அவருடைய உரையை அன்று இருந்த மிக மோசமான தெற்கின் பேரினவாத கும்பல்கள் எல்லாம் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்திருந்த சூழலிலும், அவருடைய உரைக்கு தனி மதிப்பிருந்தது என்பதை நாங்கள் கண்கூடாகக் கண்டோம்.
ஆஜானபாகுவான அவரது பருமமான நெடிய தோற்றப் பொலிவும், அதற்கே உரித்தான அவருடைய சட்ட ஆற்றலும் எப்படியெல்லாம் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் தங்கத்துறை, குட்டிமணி, ஜெகன் போன்றவர்களுக்காக அவர் தோன்றி வாதாடிய போது நாங்களெல்லாம் இளம் சட்டத்தரணிகளாக அவருடைய வாதத்திறனைப் பார்த்து வியந்து போனோம். மிக நேர்த்தியாக எப்படியெல்லாம், அன்றெல்லாம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் குற்றவியல் குற்ற ஒப்புதல்களையெல்லாம் இருக்கிற சந்தேக நபர்களுக்கு எதிராக பாவிக்க முற்படுகின்ற போது, அவற்றை மிகத் திறமையாக அவர் எவ்வாறாக சாட்சிகள் கட்டளைச் சட்டத்தை, குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையை, தண்டனைச் சட்டக்கோவையை பிரிவு பிரிவாக மிக லாவகமாக விளக்குகிற போது நாங்கள் இளம் சட்டத்தரணிகளாக அதைப் பார்த்து அவரிடம் இருக்கிற எச்ச சொச்ச அறிவையும் பெற்றவர்களாக, அந்த பாக்கியம் ஏதோ சில தடவைகளாவது எங்களுக்கு கிட்டியது என்று நாங்கள் இன்று பெருமைப்படுகிறோம்.
அவர் சாமான்யமான தலைவரொருவரல்லர். அதைத்தான் நான் சொன்னது மாதிரி அவருடைய இறுதி மரியாதைக்காக அவருடைய பூத உடல் கொழும்பிலிருந்து இங்கு சோனப்பு மயானத்திற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த போது எந்த இயக்கம் அவருக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டியதோ, அதே இயக்கம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு போராளிகளின் உடல்கள் கொண்டு செல்லப்படுகிற போது கொடுக்கிற மரியாதையைவிடவும், இரட்டிப்பு மடங்கான மரியாதையை கொடுத்து அவரை கௌரவப்படுத்தினார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.
அவர் நாடாளுமன்றத்தில் இல்லாத காலங்களிலும், இந்த தமிழர் போராட்டத்தை எவர் எவரெல்லாம் கொச்சைப் படுத்தி, குறைகண்டு, அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க என்று புறப்பட்டார்களோ அவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு பெரும் தலைவரைத்தான் இங்கு நாங்கள் இழந்து தவிக்கின்றோம்.
தமிழரசு கட்சியின் தலைவர்கள் பனாகொடை முகாமில் தடுத்துவைக்கப்படுகின்ற போது அங்கு போய் அவர்களுக்காக வாதாடுவதும், விடுதலைப் புலிகள் போராளிகள் வெலிக்கடை சிறையில் வாடுகின்ற போது அவர்களுக்காக வாதாடுவதும், எல்லா அரங்குகளிலும் தன்னுடைய வாதத்திறனை இன உய்வுக்காக முழுமையாக அர்பணித்து செயல்பட்டவருக்குதான் இன்று பிறந்த நூற்றாண்டு, அவர் பிறந்த மண்ணில் கொண்டாடப்படுகிறது.
இங்கு என்னிடம் கேட்டுக் கொண்டபடி, சமகாலத்தைப் பற்றியும் பேசுவதாக இருந்தால், இன்று எங்களுடைய ஜனாதிபதி இந்தியாவுக்குப் போயிருக்கிறார். ஒரு வருட காலம் அழைப்பு கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏக்கத்தோடு இருந்து, ஓர் அழைப்பு வந்த நிலையில், மிக ஆறுதலாக புதுடெல்லி நோக்கி பயணமாகியிருக்கிறார். அதனோடு தொடர்புபடுத்தி அண்ணன் சிவாவினுடைய வாழ்க்கையையும் தொட்டு நான் பேசலாம் என்று நினைக்கிறேன்.
நான் இன்று சில விடயங்களை சமகால அரசியல் தொடர்பாக பேசுகின்ற போது, இங்கு முக்கியமான சில அம்சங்களை கோடிட்டுக் காட்டலாம் என்பதற்காக சில விடயங்களை எடுத்துக் கொண்டு வந்தேன்.
இந்தியா அரசு எங்களுடைய ஜனாதிபதியை டெல்லிக்கு அழைத்திருக்கிறார்கள். இது எல்லா ஜனாதிபதிக்கும் கிடைக்கிற ஒரு பேறு. தனக்கு ஒரு வருட காலமாகக் கிடைக்கவில்லையே என்கின்ற ஆதங்கம் அவரை ஆட்டிப்படைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. நாங்கள் அறியாத விடயமல்ல. அதில் என்ன சூட்சுமம் இருக்கிறது? ஏன் இப்படி ஒரு வருடகாலம் அழைக்கவில்லை என்பதைப்பற்றி இந்திய அரசாங்கத்திடம்தான் கேட்கவேண்டும்.
அண்ணன் சிவாவுடைய மகளார், தன்னுடைய தாயாரோடு தந்தையார் மன்னாரில் மாநாட்டில் இருந்தவேளையில் இவருடைய வீடு, கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியில் தீக்கிரையாக்கப்படுகிறது. வீடு தீக்கிரையானது ஒரு புறம், 1981ஆம் ஆண்டு யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதைப் போலவே அண்ணன் சிவாவுடைய நூலகமும் ஒரு சாமான்யமான நூலகமுமல்ல.அந்த அரிய, பெரிய நூல்களைக் கொண்ட நூலகம் முழுமையாகதத் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், மதிலேறிக் குதித்து வெளியேறி ஓடிய ஓர் இளம் பெண்ணாக இருந்த அவருடைய மகளார் இந்த நிகழ்வுகளை மீட்டிப்பார்ப்பார் என நான் நினைக்கிறேன். எப்படியான அவதியும், அவலமுமாக அந்தக்காலம் இருந்திருக்கும் என்பதை நினைக்கவே மிகவும் அச்சமாக இருக்கிறது.
அண்ணன் சிவாவுடைய வீட்டிற்கு என்னுடைய மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த போது பல இலட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஒரு காசோலை எழுதி நஷ்ட ஈடாகக் கொண்டு சென்றபோது, "தம்பி என்னுடைய சமூகத்தில் அனைவருக்கும் இழப்பீடு கிடைக்கும் வரை நான் இதை எடுப்பது நல்லதல்ல" என்று கூறி, ஒதுங்கிவிட்ட பெருமகனார் அண்ணன் சிவா.
இதே அண்ணன் சிவா, கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் "யாழ் மண்ணில் இருந்து கூண்டோடு விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் மீளக்குடியேறும் வரை அந்த மண்ணை நான் மிதிக்கமாட்டேன்" என்று எடுத்த சபதம் எங்களையெல்லாம் அவரின் சொற்களால் அவரை அப்படியே வசீகரித்துவிட்ட வசனங்களாக இன்று நெடுநாளும் பேசப்படுகிற விடயமாக இருந்து வருகிறது. அதை தன்னுடைய கடைசி மூச்சுவரை கடைப்பிடித்த ஒரு தலைவருக்குதான் இன்று இங்கு இந்த விழா எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அவரைப்பற்றி ஒரு சிரேஷ்ட ஆங்கில பத்திரிகையாளர், அவர் பிரதி சபாநாயகராக இருந்தபோது , "The Deputy Speaker of Ceylon is living like a hermit in a Cottage" ("இலங்கையின் பிரதி சபாநாயகர் துறவியொருவரைப்போல, ஒரு முனிவரைப் போல குடிசையில் வாழ்கிறார்") என்று அவரைப்பற்றி சொன்னதைப் பார்க்கிறபோது, இந்த தன்னலம் கருதாத தனிப் பெரும் தலைவரைப் பற்றி வேறு எதைச் சொல்வது?
நான் சமகால அரசியலை பற்றி பேச வந்து திரும்ப, திரும்ப அண்ணன் சிவாவிடம் போய்க்கொண்டிருக்கின்றேன்.
இலங்கையில் அதிபர்களை இந்தியா அழைக்கிற போது, அதில் என்ன சூட்சுமம் இருக்கும் என்பது ஒருபுறம், ஆனால் இந்திய வெளிவுறவு அமைச்சர் இங்கு வந்தபோது, இலங்கை அதிபர் இந்தியா போனதும் ஒரு கூட்டறிக்கை வெளியிடுவார்கள், அந்த கூட்டறிக்கையின் உள்ளடக்கம் எப்படி அமைய வேண்டும் என்று ஏற்கனவே முன்னேற்பாடுகள் நடக்கும், அந்த முன்னேற்பாடுகளில் ஒன்றாக 13ஆவது சட்ட திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்பது சம்பந்தமாகவும் உள்ளடக்கப்படவேண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாக இருக்கும். இருந்தது, இனியும் இருக்கலாம் என்கிற விடயம் எல்லோருக்கும் தெரிந்த விவகாரம்.
எனவே, அதில் அதை எப்படி போடுவது என்பதில் இலங்கை ஜனாதிபதி செயலகத்தினருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் இடையில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைகளில் கொஞ்சம் இழுபறி என்றும் கேள்விப்பட்டோம். என்ன இழுபறி என்று பார்த்தால், இலங்கை அதிபர் அப்படி அறிக்கையை கூட்டாக வெளியிடுகிற போது, 13ஆவது சட்ட திருத்த்தை நாடாளுமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்று போட முயற்சிக்கிறார். இது அவருக்கே உரித்தான, மிக லாவகமான, இன்னுமொரு புறத்தில் சொல்லப்போனால் கொஞ்சம் கபடத்தனமான ஒரு செயல்பாடு.இதற்கு இந்திய அரசு ஒப்புதல் தருமா, இல்லையா என்பதை அவர் அந்த கூட்டறிக்கை வந்தால்தான் தெரியும். சிலவேளை கூட்டறிக்கை வராமல் விட்டுவிடலாம், இந்தக் காரணத்திற்காக, இப்படி இந்த மாயமான் தேடுகிற வித்தை மாதிரி இனி 13ஆவது சட்டதிருத்தத்தின் முழு அமுலாக்கத்தையும் நாங்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டு, எதிர்பார்த்துக் கொண்டிருப்பதா என்கிற ஒரு நிலவரம்.
ஆனால், தமிழக முதல்வரைக் கேட்டால், இங்கு 13ஆவது திருத்தம் அமுலாக்கம் ஒருபுறம் இருக்கட்டும், தமிழகத்தில் மத்திய அரசின் ஆளுனராக இருப்பவரின் அட்டகாசத்தைப் பார்த்தால் ,அவருக்கு எதிராக இந்திய ஜனாதிபதிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். "இந்த அட்டகாசத்தை நிறுத்துங்கள் ; எங்களுடைய உரிமைகளை, தந்ததைப் பறிக்கிற இந்த தந்திரோபாயத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று தமிழகம் டெல்லியைப் பார்த்து கேட்கிறது. இதுதான் அங்கு இருக்கிற அதிகாரப் பகிர்வின் இலட்சணம்.
இது, நான் இன்னொரு நாட்டின் அரசியலைப் பேசுகிறேன் என்பதல்ல, ஆனால், இந்த இடத்திலேதான் நாங்கள் எதைப்பார்த்து எதற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறோம் என்று எத்தனிக்கிற போது, எமக்குள்ளே எமது நாட்டில் அந்த தீர்வைப் பெற்றுத்தருகிற அந்த வல்லமை இந்த அதிபருக்கு இல்லையென்றால், இன்னொரு நாட்டின் தயவில் ஒரு கூட்டறிக்கையின் செயல்பாட்டினால் அதை நாங்கள் அடையமுடியும் என்று அபரிமிதமாக எதிர்பார்க்கலாமா? என்பதுதான் நான் கேட்கின்ற கேள்வி.
இராஜதந்திர பிராந்திய மூலோபாய தத்துவங்களுக்குள்ளே சிக்கித்தவிக்கின்ற எல்லா நாடுகளுக்கு மத்தியில் நாங்களும் இருக்கிறோம்.
இதைத்தான் ஓர் இடத்தில் மேற்கோள் காட்டுவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர், இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட உடனேயே ஒரு பகிரங்க அறிக்கையில் ஒன்றைச் சொல்லியிருக்கின்றார். அதாவது,
"The Agreement -Hindu Lanka Accord did not concern only the problems of Tamils. This is primarily concerned with Indo-Lanka relations. It also contains within itself the principle requirement for Sri Lanka to exceed India .India's power has decide in a manner that is essential. What are we to do?"
"இந்திய-இலங்கை ஒப்பந்தம் தமிழர்களின் பிரச்சனைகளை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை, இது முதன்மையாக இந்திய -இலங்கை உறவுகளுடன் தொடர்புடையது. இந்தியா இலங்கையை விஞ்சி விட வேண்டும் என்ற அடிப்படைத் தேவையையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது"
அப்படி அங்கலாய்த்த விடுதலைப் புலிகளின்! தலைவர் ஓர், இரண்டு மாதங்கள் போகவில்லை இலங்கைப் படையோடு மோதவில்லை ; இந்திய அமைதிப் படையோடு மோதலை ஆரம்பிக்கிறார் .
அந்த மோதலின் பின்னணியில்தான் இலங்கை இனப் பிரச்சினை இன்னும் பூதாகரமாகத் தீவிரமடைகிறது.
எல்லோருக்கும் தெரியும் இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, ஒப்பந்தம் ஒருபுறம் இருக்க, ஒப்பந்தத்திற்கு புறம்பாக கடிதப்பரிமாற்றம் நடந்தது .
அந்த கடிதப்பரிமாற்றத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இலங்கையில் இருக்கிற தமிழ் விடுதலை ஆயுதக் குழுக்கள் அனைத்தினும் ஆயுதங்கள் களையப்படவேண்டும், அந்தக் களைவுக்கு இந்தியா உத்தரவாதமளிக்கிறது என்பது ஒரு கடிதப்பரிமாற்றத்தின் ஏற்பாடு. இந்த ஏற்பாட்டோடு சேர்த்துதான் அன்று விடுதலைப் புலிகளோடு முரண்பாடு ஏற்பட்ட நிலையில், அன்றைய இந்தியத் தூதுவர் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகிழக்கிற்கு தேர்தல் நடத்துவது என்ற விவகாரத்தில் முனைப்புக் காட்டினார். ஏன் முனைப்புக் காட்டினார்? இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி மாகாண சபையை அமைப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபடுவதற்காக, நாங்கள் தேர்தல் நடத்தப்போகிறோம் என்பதன் மூலம் நாங்கள் தமிழர்கள் மத்தியில் இந்த ஆயுதக் களைவிற்கு அஙகீகாரம் பெறலாம் என்பதுதான் அதனுடைய ஏற்பாடு.
ஏனென்றால், அன்றைய பொதுமக்களின் கருத்து ,இதனை டிக் ஷித் ஒரு இடத்தில் இப்படிச் சொல்கிறார் "எங்களுடைய உளவுத்துறை நினைக்கிறது, நாங்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை களைந்து அவர்களையும் அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டுவரும் வரை தேர்தல் நடத்தக்கூடாது என்று எங்களது உளவுத்துறை நினைக்கிறது "என்று சொல்கிறார். "உளவுத்துறையை மீறி, நான் நினைக்கிறேன் இப்படிச் செய்தால்தான் அதை ஓர்அழுத்தமாக விடுதலைப் புலிகளுக்கு மேல் எங்களால் கொண்டுவரமுடியும் எனவே, தேர்தல் நடத்தவேண்டும்".என்கிறார்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், போயிருக்கின்ற ஜனாதிபதிக்கும் தேர்தல் நடத்துங்கள் என்று இந்தியா சொல்லும். ஆணாணப்பட்ட விடுதலைப் புலிகள் இந்தியா அமைதிப்படையோடு மோதியபோதும் தேர்தல் நடத்தித்தான் ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்த இந்தியா அரசு , தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களை ஏமாற்றியது போல் , ஏமாற்றவிடுமா என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இன்றைக்கு என்ன டெல்லியிலே பேசப்படப்போகின்றது? நாளைக்கு,நாளை மறுநாள் என்ன நடக்கப்போகின்றது என்பதைப் பொறுத்து நடக்கின்ற விடயம்.
இருந்தாலும் , சில ஊகங்களை நான் பகிர்ந்து கொள்கிறேன். நடக்கவில்லை என்றால் அது நமது கெதி,ஒன்றும் செய்ய இயலாது, ஆணாணப்பட்ட ஜனாதிபதியின் வீடு தீப்பற்றி எரிந்ததற்கே நானும்,சுமந்திரனும்தான் காரணம் என்று சொல்லிப்போட்டார்.
இப்படியான நிலைவரங்கள் இருந்த நிலையில், இப்போது அவர் அங்கு போய்வந்து இங்கு தேர்தலை நடத்துவாரா? என்பது அடுத்த விடயம்.
இப்படி இருக்கத்தக்கதாக, முதலாவது வடகிழக்கு மாகாண சபை தேர்தல் ஏதோவொரு வகையில் நடக்கிறது, அந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி கலந்து கொள்ளவில்லை.எந்த நிலைப்பாட்டை அன்று இந்திய உளவுத்துறை தெளிவாகச் சொன்னதோ, விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை களையும்வரை தேர்தல் நடத்தவேண்டாம் என்ற டிக் ஷித் சொல்லுகின்ற மாதிரி அன்று இந்திய உளவுத்துறை எதை நினைத்ததோ , தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் அதே கொள்கையில் இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை களையாதவரை தேர்தல் நடத்தி பயனில்லை என்பதுதான்.
அதனுடைய விளைவு நாங்கள் தலைவர்கள் நிறையப் பேர்களை பலிகொடுத்துவிட்டோம்.
வடகிழக்கிலும்,தெற்கிலும் சாமான்யமான தலைவர்களல்லர். பெரும்,பெரும் தலைவர்களை ,ஏன் ஜனாதிபதி பிரமதாச உட்பட, தெற்கில் பார்க்கப்போனால் லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயக்க என்றொரு நீண்ட பெரும் பட்டியல். சந்திரிக்கா அம்மையாருடைய கண் பார்வை பறிபோய்விட்டது. அண்ணன் அமிர்த லிங்கம், யோகேஸ்வரன் என அப்படியொரு நீண்ட பட்டியல், இப்படி எல்லாப் புறங்களிலும் தலைவர்களை இழப்பதற்கு இந்த ஆயுதக்களைவு நடக்கும் என்று இந்தியா தந்த உத்தரவாதம் நடக்காமல் இருந்தது. இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் மோதல் தொடர்ந்தது, இதனால் இந்த அவலம் நிகழ்ந்ததா? இந்த இழப்புகளை சந்தித்தோமா? என்று அரசியல் அவதானிகள் இதை பலவாறு பார்க்கலாம்.
ஆனால் , இன்று கடந்த காலத்தை திரும்பி பார்க்கிறபோது ,இந்த கட்டத்தில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட தீர்மானித்தது .ஆனால், எங்களுக்கொரு பிரச்சினை இருந்தது.எங்களைக் கேட்காமல் வடகிழக்கு இணைவு நடந்துவிட்டது, அதனால் எங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இதை நாங்கள் அரசியல் மயப்படுத்தி மக்களைத்திரட்டவேண்டும் .எனவே அதற்கு களமாக நாங்கள் இந்த தேர்தலைப் பயன்படுத்தவேண்டு ம் எனத் தீர்மானித்தோம்.
வடகிழக்கிலும் போட்டியிட்டோம் அந்த மாகாணசபைத் தேர்தலில் புலிகளின் அச்சுறுத்தலைத் தாண்டியும் போட்டியிட்டோம்.அதி ல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரைப் பலி கொடுத்தோம்.நண்பர் அலி உதுமான்,மன்சூர் என்ற மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை விடுதலைப் புலிகள் கொலைசெய்கின்ற அளவிற்கு அவர்களுடைய வக்கிரம் எங்களைப் பாதித்தது. இருந்தும் நாங்கள் பங்கேற்றதற்கான காரணம், அந்த களத்தை நாங்கள் கைவிடமுடியாது என்பதற்காக. அதனூடாக எமக்கு நடந்த,எங்களைக் கேட்காமல், எங்களோடு உடன்பாடில்லாமல் சில விடயங்கள் நடந்துவிட்டன. என்கின்ற அந்த ஆதங்கத்தை உலகமயப்படுத்தவேண்டும் என்பதுதான் அதனுடைய அடிப்படை.
அதனுடன் சேர்த்து லாவகமாக அன்றிருந்த அந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்பதற்கு இருந்த பிரமதாசவை வெற்றிபெறச் செய்தோம். இறுதி நேரத்தில் சிறிமாவோ அம்மையாரின் அணியிலிருந்து விலகிப்போய் பிரமதாசவிடம் நாங்கள் பேரம் பேசினோம்.அதன் மூலமாக நாடாளுமன்ற தேர்தலின் 12% சதவீதமான வெட்டுப் புள்ளியை 5% சதவீதமாகக் குறைத்ததோடு சேர்த்து 19 கோரிக்கைகளையும் வென்றெடுத்தோம்.
இலகுவாக எங்களுடைய 19 கோரிக்கைகளைத் தந்த பிரமதாச அரசு, தேர்தல் வெற்றிக்காக அவற்றை எங்களுக்கு வாரிவழங்கத் தயாராகவிருந்தது.
ஆனால் 1972 ஆம் ஆண்டு அண்ணன் சிவா உட்பட தமிழர் விடுதலைக்காக இரண்டு எதிரும் புதிருமாக இருந்த தமிழ் காங்கிரஸும்,தமிழரசு கட்சியும் இணைந்து தமிழர் கூட்டணி அமைந்த போது அவர்களுடைய 9 அம்ச கோரிக்கை பிறகு 6 அம்சமாகி அதைக் கொண்டுபோய் மக்களவையில் நிறைவேற்றப்படவிருந்த அரசியல் அமைப்பில் குறைந்தபட்சம் கொள்கை ரீதியாக சமஷ்டியை அங்கீகரியுங்கள் என்ற கோட்பாடுகள் உட்பட கேட்கப்பட்டதை தூக்கி எறிந்தது.அன்றைய அரசு, தொடர்ச்சியாக அப்படியே தமிழ் தேசியப் பரப்பில் வன்முறை அரசியல் உருவாவதற்கு வித்திட்டது என்பது நாங்கள் எல்லோரும் இன்று கண்கூடாக பார்க்கிறவிடயம்.
அதன் விளைவுதான் ஈற்றில் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தோடு , இருந்த 17 உறுப்பினர்களோடு உத்தியோக பூர்வ எதிர் கட்சியாக இருந்த தமிழரசு கட்சி நாட்டு பிரிவினைக்கு எதிராக, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமைவாக நாங்கள் சத்தியப்பிரமாணம் எடுப்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கலின் காரணமாக அத்தனை உறுப்பினர்களும் பதவி துறந்தார்கள். அண்ணன் ஆனந்த சங்கரி உட்பட, அண்ணன் சிவா அதனோடு சேர்த்து அன்றிலிருந்து அவருடைய இறுதி நாள் வரையும் 19 வருடங்கள் நாளுமன்றத்தை எட்டிப்பார்க்கவில்லை. வாய்ப்புக்கிட்டவில்லை. அந்த 19 வருட இடைவெளியில் அவர் சும்மா வாளா இருக்கவில்லை சென்னையிலும்,கொழும்பிலும், டெல்லியிலும் அண்ணன் சம்பந்தரோடு அண்ணன் சிவா, நீலன் திருச்செல்வம் உட்பட எத்தனையோ பேச்சுவார்த்தைகள். அவற்றின் விளைவுதான் 13 ஆவது சட்டத்திருத்தம். அன்று பாதுகாப்பு அமைச்சராகவிருந்த சிதம்பரம், அன்னை இந்திராவின் தூதுவராக இங்கு வந்ததைத் தொடர்ந்து, பாத்தசாரதி வந்தார். அதற்குப் பிறகு டிசம்பம் 19 ,1986 ஆம் ஆண்டு அறிக்கை வந்தது அந்த அறிக்கைக்கு அமைவாக வெறும் மாவட்டத்தைத்தான் தருவோம் என்றிருந்த இலங்கை அரசின் நிலை மாகாணத்தையும் சேர்த்து ஏன் தேவை ஏற்படுகிற போது மாகாணங்களை ஒன்றாக இணைத்து தருவதற்கும் உடன்பாடு தருகின்ற அளவிற்கு அது வியாபிக்கின்ற அத்தனை வேலைப்பாடுகளுக்கும் அண்ணன் சிவாவுடைய பங்களிப்பும் பிரதானமானது என்பதை தமிழுலகம் இலகுவில் மறந்துவிடமுடியாது.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தானைத் தளபதியாக இருக்கின்ற அண்ணன் சம்பந்தன் உட்பட இங்கு மேடையில் இருக்கிற தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள்,காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர்கள் என்று இருக்கின்றவர்கள் எல்லோருமாக இந்த 13ஆவது சட்ட திருத்தத்தின் வடிவாக்கத்தில் பங்காளிகளாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அதன் பின்னணியில்தான் இன்று ஜனாதிபதி இந்தியா போயிருக்கிறார்.
ஒரு தேர்தலை நடத்துவதற்கு முடியுமா,இல்லையா என்பதிலும் இழுத்தடிப்புச் செய்கிறார்.
எங்களைப் பொறுத்தமட்டில், இந்தப் பிரச்சினைகளுக்குள் மிக முக்கியமான விடயம், இன்று வடக்கும்,கிழக்கும் பிரிந்ததாகவிருக்கலாம் .ஆனால் 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திற்கு தனியாக தேர்தல் நடந்தபோது முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகப் நாடாளுமன்றத்திலிருந்த நான், என்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைத் துறந்து கிழக்கில் போட்டியிடுவதற்குச் சென்றபோது ,அந்த தேர்தலில் எங்களுக்கு தமிழரசு கட்சி உட்பட தமிழ் கூட்டணியின் உறுப்பினர்கள் மறைமுகமான அங்கீகாரத்தையும், ஆதரவையும் தந்தார்கள். அதன் பயனாக அமோகமான வெற்றியை நான் திருகோணமலையில் அடையக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது, ஆனால் பாரிய தேர்தல் தில்லு முள்ளுகளுக்கு மத்தியில் எங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிட்டவில்லை என்றாலும், அடுத்த ஆட்சி அமைந்தபோது அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் தருவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக அண்ணன் சம்பந்தன் மிகப் பெரிய ஒரு தியாகத்தை எங்களுக்காக செய்தார். அதற்கு நான் நன்றி கூறவேண்டும்.
இந்த நட்புறவு நீடிக்கவேண்டும், தொடர்ந்தும் நாங்கள் தலைமைப் பதவிகளை பரிமாறிக் கொள்கிற உடன்பாடுகள் மூலம் இந்த வல்லூறு அரசியல் செய்கிற, இங்கு வக்கிரமாக எங்களுடைய பூமிகளைப் பறிக்கிற, எங்களுடைய தாயகத்தில் இப்படியான பெரிய குழப்பங்களை உருவாக்கிக் கொண்டு, இன்று குருந்தூர் மலையில் செய்கிற இந்தக் கூத்தைப்போல் பல நூறு இடங்களில் இன்று பிரச்சினைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் பேசும் சமூகங்கள் பேதங்களை மறந்து அண்ணன் சிவா என்கிற அந்த ஆலமரத்தின், தனிப்பெரும் ஆளுமையின் எந்த சமூகத்தின் அவலத்திற்காக தான் தன்னுடைய பிறந்த மண்ணை கடைசிவரை மிதிக்கமாட்டேன் என்று சபதம் பூண்டாரோ அவருடைய பெயரால், அவருக்கு செலுத்துகிற கடைசி மரியாதையாக நாங்கள் இணைந்து பயணிக்கின்ற பயணம் மிகவும் முக்கியமானது, மிகவும் அடிப்படையானது என்பதை தெரிவித்தவனாக, எதிர்கால அரசியலில் எந்த வேறுபாடுகளும்,பிரச்சினைகளும் இருந்தாலும் கூட, சின்னச் சின்ன சில்லரைப் பிரச்சினைகள் ஏராளம் இருந்தாலும் எல்லா இடங்களிலும், அந்தந்த பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு அவை சில்லரை பிரச்சினைகளாகத் தெரியமாட்டாது, அவைதான் தேசியப் பிரச்சினையாகத் தெரியும், அதற்குத் தீர்வு காணாமல் இதில் ஒற்றுமைக்கு இடமில்லை என்பார்கள் ஆனால், அதையும் மீறி தேசியத் தலைமைகள் இதில் வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமை காணுகின்ற அந்த விஷயம் எந்த தார்மீகத்திற்காக காங்கிரஸ் காரனாக இருந்து கொண்டு தான் 1962 ஆம் ஆண்டு யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்னால் தன்னுடைய அந்த சமரச முயற்சியை ஆரம்பித்தாரோ ,அந்த முயற்சி 1970 களில் கைகூடி, ஈற்றில் தந்தை செல்வாவும் , ஜீ.ஜீ.பொன்னம்பலமும் 1976 ஆம் ஆண்டு திடிர் என்று எங்கள் மத்தியிலிருந்து மறைந்த பின்னர், இந்த தமிழினத்தின் தானைத் தளபதியாக, தானும்,அண்ணன் அமிர்தலிங்கமும் தளபதிகளாக அந்த பொறுப்பை ஏற்று வழிநடாத்திய அண்ணன் சிவா போன்றவர்களினுடைய ஒரு அஞ்சலி நிகழ்வில் அவருக்குச் செலுத்துகிற மாபெரும் அஞ்சலி தமிழ்பேசும் சமூகங்களின் ஒற்றுமை,ஒற்றுமை, ஒற்றுமையன்றி வேறு எதுவுமல்ல என்று அன்போடு3 கூறியவனாக விடைபெறுகிறேன்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)