மலையகத்தை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்...!

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மலையகத்தை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்...!

மலையக எல்கடுவ ரத்வத்தை தோட்ட வீடு உடைப்பு விவகாரம் மலையக மக்களின் நிலப்பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கி உள்ளது. மலையக அரசியல் சக்திகள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒருங்கிணைந்த கண்டனக்குரலை வெளிப்படுத்தியுள்ளனர். இது வரவேற்கப்படவேண்டிய விடயம் என்பதோடு வடக்கு – கிழக்கு சக்திகள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகும். பாராளுமன்றத்திற்கு இந்த விவகாரத்தை மலையகக் கட்சிகள் கொண்டு வந்த போது வடக்கு – கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். இதுவும் வரவேற்கப்படவேண்டிய விடயம் தான். ஆனாலும், ஆதரவு போதுமானது என கூறிவிட முடியாது. வடக்கு – கிழக்கின் பல பாராளுமன்ற உறுப்பினர்களை அங்கு காண முடியவில்லை. வடக்கு – கிழக்கின் முக்கிய கட்சித்தலைவர்கள் இது பற்றி பெரியளவிற்கு இன்னமும் வாயைத் திறக்கவில்லை.

மாத்தளை ரத்வத்தை தோட்ட விவகாரம் மலையக மக்களின் நிலப்பிரச்சினையை சர்வதேச மட்டம் வரை வலுவானதாக்க கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பம். ஆனால், துரதிஸ்ட வசமாக இது பெரியளவிற்கு வளரவில்லை. மலையக சக்திகள் இதனை பெரிய போராட்டமாக முன்னெடுத்திருந்தால் வடக்கு – கிழக்கு, தமிழ்நாடு, புலம்பெயர் நாடுகளிலும் இது பெரிய போராட்டமாக வெடித்திருக்கும். இவ்வாறு வெடித்திருந்தால் உலக மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து சட்ட ரீதியாகவே பாரிய முன்னேற்றங்களை கண்டிருக்கலாம். உண்மையில் “உதவி முகாமையாளரை கைது செய்” என்ற கோசம் “நிலங்களை மலையக மக்களுக்கு உடமையாக்கு” என்ற கோசமாக வளர்ந்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை.

தற்போது கூட காலம் பிந்தி விட்டது எனக் கூற முடியாது. மலையக சக்திகள் இதில் கவனம் எடுத்து விவகாரத்தை முன்னோக்கி கொண்டு வருவது பற்றி யோசிப்பது அவசியமானது. இந்த விவகாரத்தில் பிரதான சக்திகள் மலையக மக்கள் தான். ஏனையவர்கள் துணைச்சக்திகள் தான். பிரதான சக்திகள் போராடாமல் துணைச்சக்திகளால் போராட முடியாது.

மிக நீண்ட காலம் இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிப்பிடித்தவர்கள் மலையக மக்கள் தான். பெருந்தோட்டத்துறையுடன் மாத்திரம் மட்மல்லாமல் வீதி அமைப்பு , துறைமுக அமைப்புகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்றும் கூட தேறிய வருமானத்தில் தேயிலையும், இறப்பருமே முன்னிலை வகிக்கின்றன. இதனால் இன்னும் கூட பொருளாதாரத்தின் அடிப்படை சக்திகள் மலையக மக்கள் தான். இந்த மக்கள் தொடர்பாக தென்னிலங்கையும் , அரசாங்கமும் என்ன நன்றியைத் தெரிவித்துள்ளன என்ற கேள்வியை இன்று காத்திரமாக எழுப்ப வேண்டியுள்ளது.

மாத்தறை ரத்வத்தை தோட்ட விவகாரம் சந்தர்ப்பங்களை தவற விடக்கூடாது, ஒருங்கிணைந்த அரசியலின் அவசியம் போன்ற செய்திகளையும் மலையக சக்திகளுக்கு கூறியிருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியமானது.

சென்ற வாரம் மலையக – வடக்கு கிழக்கு உறவை கட்டியெழுப்புவதில் உள்ள சவால்களைப்பார்த்தோம். இந்த வாரம் சவால்களை வெற்றி கொள்ள என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். வரலாறு சவால்களை மட்டும் வழங்குவதில்லை மாறாக வெற்றி கொள்வதற்கான மார்க்கங்களையும் வழங்குகின்றது என்பதை நாம் மறக்கக் கூடாது.

சவால்களை வெற்றி கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளில் முதலாவது, ஒரு தரப்பின் அரசியலை மற்றைய தரப்பு புரிந்து கொள்வதாகும். இதில் எந்த வகையிலும் திணிப்புக்கள் இருக்கக் கூடாது. ஒரு தரப்புக்கு மற்றைய தரப்பு துணையாக இருப்பது பற்றியே சிந்திக்க வேண்டும். சகல மட்டங்களிலும் ஒருங்கிணைந்த வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அரசியல், பொருளாதாரம், சமூகம் என இந்த ஒருங்கிணைவுகள் பரிணமிக்க வேண்டும். சென்ற வாரக் கட்டுரையில் கூறியது போல அரசியலில் பொது விவகாரங்களையும் , துணை விவகாரங்களையும் அடையாளம் கண்டு ஒத்துழைப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கலாம். உள்நாட்டு மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் ஒருங்கிணைந்து செயற்படலாம். இரண்டு தரப்புகளிலும் புலம்பெயர் சக்திகள் இதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஜெனீவா தமிழ்த் தரப்பிற்கு கிடைத்த ஒரு சர்வதேசக்களம். அங்கு வடக்கு – கிழக்கு விவகாரம் பேசப்படுகின்றதேயொழிய மலையக விவகாரம் பேசப்படுவதில்லை. எதிர்காலத்தில் அதனையும் பேசு பொருளாக்க வேண்டும். மலையக அரசியல் சக்திகளும் , சிவில் தரப்புகளும் ஜெனீவா கூடும் காலங்களில் ஜெனீவாவிற்கு செல்ல தவறக்கூடாது.

கல்வி மட்டத்திலும் பல செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். கணித, விஞ்ஞானத்துறைகள் மலையகத்தில் பலவீனமாக உள்ளன. எனவே இது விடயத்தில் பொது நிதியம் ஒன்றை உருவாக்கி அந்த நிதியத்தின் கீழ் மலையக மாணவர்கள் வடக்கு – கிழக்கில் கற்பதற்கு ஒழுங்கினைச் செய்து கொடுக்கலாம். ஏற்கனவே சைவ மகா சபை போன்ற அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் அப்பணிகளை ஆரம்பித்து விட்டன. இது மேலும் வளர வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 400 க்கு மேற்பட்ட மலையக மாணவர்கள் கற்கின்றனர். அவர்களில் பலர் கற்றலைத் தொடர்வதற்கு நிதிவளமின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். பல்கலைக்கழக மலையக மாணவருக்கென பொது நிதியம் ஒன்றை உருவாக்கி அவர்களின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவலாம். யாழ்ப்பாணத்தில் செயற்படுகின்ற தனியார் நிறுவனங்கள் பகுதி நேர வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு ஒழுங்கு செய்து கொடுப்பதும் ஆரோக்கியமாக இருக்கும்.

பொருளாதார மட்டத்தில் மலையகத்தில் உழைப்பு இருக்கின்றது. வடக்கு – கிழக்கில் மூலதனம் இருக்கின்றது. இவை இரண்டையும் இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். பேராதனை பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளருமான விஐயச்சந்திரன் ஏற்கனவே இவ் ஆலோசனையை முன்வைத்திருக்கின்றார். அந்த உழைப்பு என்பது வெறுமனவே கூலியாளராக இல்லாமல் மதிப்புக் கூட்டப்பட்ட உழைப்பாக இருக்க வேண்டும். மலையகத்தின் ஐதான பகுதிகளில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் அடையாளங்களை இழந்து வருகின்றனர். அவர்கள் மத்திய மலைநாட்டுக்கோ வடக்கு – கிழக்கிற்கோ குடியேறுவது அவர்களின் அடையாளத்தை பாதுகாக்க உதவியாக அமையும்.

இரண்டாவது, வடக்கு – கிழக்கில் உள்ள மலையக வம்சாவழியினருக்கு போதிய அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்ற அதிர்ப்தி மலையகத்தின் நடுத்தரவர்க்கத்திடம் காணப்படுகின்றது. இந்த அதிர்ப்தியைப் போக்க வேண்டியது வடக்கு – கிழக்கு சக்திகளின் கடமையாகும். இதற்கான ஆரம்பச் செயற்பாடுகள் முதலில் அரசியல் மட்டத்தில் ஆரம்பிக்க வேண்டும். போதிய பிரதிநிதித்துவம் அவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக வம்சாவழியினரே பெரும்பான்மையானதாக உள்ளனர் ஆனால், மாகாண சபையில் கூட அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடையாது. உள்ளூராட்சி மட்டங்களிலும் போதிய பிரதிநிதித்துவம் உள்ளது எனக் கூற முடியாது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

தவிர பொது நிறுவனங்களிலும் மலையக வம்சாவழியினர் உள்வாங்கப்பட வேண்டும். அரசு சார்பற்ற நிறுவனங்களில் இது ஓரளவிற்கு இருந்தாலும் சமூக நிறுவனங்களில் போதியளவு உள்ளது எனக் கூற முடியாது. கிளிநொச்சி மாவட்ட மலையக வம்சாவழியினரில் இருந்து நடுத்தரவர்க்கம் இன்று எழுச்சிடைந்துள்ளது. இவர்களை ஈடுபடுத்துவது பற்றி யோசிக்கலாம்.

மூன்றாவது, வடக்கு – கிழக்கு தரப்பினர் இன்று பலம் வாய்ந்த புலம்பெயர் சமூகத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் மலையக பிரச்சினையை சர்வதேச மயப்படுத்த உதவ வேண்டும். மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு, அவர்கள் எதிர்நோக்கும் ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள், நிலப் பிரச்சினைகள், வீட்டுப் பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள், மொழிப் பிரச்சினைகள், கலாச்சாரப் பிரச்சினைகள் அரச நிர்வாகத்தில் உள்வாங்காமல் இருத்தல் போன்ற விவகாரங்களை சர்வதேச மயப்படுத்த உதவ வேண்டும்.

அதே வேளை துணைச் சக்திகள் வினைத்திறனுடன் பணியாற்ற வேண்டும் என்றால் பிரதான சக்திகள் வினைத்திறனோடு செயற்படுவது அவசியமானதாகும். எனவே, மலையக சக்திகள், துணைச் சக்திகள் செயலாற்றுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இதற்காக பல பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அதில் முதலாவது முக்கிய கோட்பாட்டு பிரச்சினைகளுக்கு அவர்கள் தீர்வு காண வேண்டும் மலையக மக்களின் அடையாளம் எது? இந்திய வம்சாவழியினரா? மலையகத்தமிழரா? மலையக மக்கள் சிறுபான்மை இனமா? தேசிய இனமா?, மலையக மக்களின் பிரச்சினை இறைமைப் பிரச்சினையா? அடையாளப்பிரச்சினையா? மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு நில ரீதியான அதிகாரப்பகிர்வா? சமூக ரீதியான அதிகாரப்பகிர்வா? என்பனவே அக்கோட்பாட்டு பிரச்சினைகளாகும். இதற்கு மலையக மக்களே தீர்வு காண வேண்டும். ஏனையவர்கள் ஆலோசனைகளை முன்வைக்கலாமே தவிர தீர்வுகளைக் கூற முடியாது.

இரண்டாவது மலையக மக்கள் தங்களுக்கான அரசியல் இலக்கையும் அதனை அடைவதற்கான வழி வரைபடத்தையும் தெளிவாக முன்வைக்க வேண்டும். இலக்கு அரசியல் தீர்வு பற்றியது. வழிவரைபடத்தில் இலக்கிற்கான நியாயப்பாடுகளை தர்க்க நிலையிலும், புலைமை நிலையிலும் தொகுத்து மலையக , இலங்கை, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாக்கல், மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் என்பனவற்றை இணைத்து மலையக தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புதல், அடிப்படை சக்திகளையும் , துணைச் சக்திகளையும், நட்பு சக்திகளையும் ஒருங்கிணைத்தல், புவிசார் அரசியலை புரிந்து கொண்டு பங்காளிகளாகுதல், சமூக மாற்ற அரசியலும் இணைந்த மலையக தேசிய அரசியலைக் கட்டியெழுப்புதல், மலையக ஆக்கிரமிப்புக்களை தடுக்க சர்வதேச மட்டத்திலான பொறிமுறையை உருவாக்குதல், நிலப்பிரச்சினை , வீட்டுப்பிரச்சினை, கல்விப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை போன்ற உடனடிப் பிரச்சினகளுக்கு தீர்வு காணல் மலையகத்திற்கான உத்தியோகபூர்வமற்ற அதிகாரக் கட்டமைப்பை கட்டியெழுப்புதல் போன்றன உள்ளடங்கியிருத்தல் வேண்டும்.

மலையக – வடக்கு கிழக்கு உறவுகள் கட்டியெழுப்பப்பட்டால் மலையக – உலகத்தமிழர் உறவுகளையோ, மலையக - உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள் உறவுகளையோ கட்டியெழுப்புவது கடினமானதாக இருக்கப் போவதில்லை.

மலையகத்தை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்
உலகத்தை மலையகத்திற்கு கொண்டுவர வேண்டும்
இந்த பணி இடம்பெறாமல் மலையக விடுதலை சாத்திய படப்போவதில்லை தற்போதைய தேவை மலையகத்திலும் வடக்கு –கிழக்கிலும் அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகளே!

மலையகத்தை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்...!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)