
posted 27th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்!
( எஸ் தில்லைநாதன்)
முல்லைத்தீவில் விற்பனை நிலையம் ஒன்று தீயில் எரிந்து முற்றாக நாசமானது.
முல்லைத்தீவு - மல்லாவி - பாலிநகர் பகுதியில் சனிக்கிழமை (26) அன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துரைராசா வசீகரன் என்பவருக்கு சொந்தமான பலசரக்கு விற்பனை நிலையம் இவ்வாறு தீயில் எரியுண்டு நாசமானது.
இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் மரணம்!
(எஸ் தில்லைநாதன்)
குளவி கொட்டுக்கு இலக்காகி சனிக்கிழமை (26) அன்றுஅதிகாலை 1 மணியளவில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் நேற்றைய முன் தினம் (26) காலை 7.45 மணிக்கு தேவாலயத்திற்கு சென்றுகொண்டிருந்தார். இதன்போது பனையில் இருந்து கீழே விழுந்த குளவி கூட்டில் இருந்த குளவிகள் அவரை கொட்டியது.
இந்நிலையில் அவர் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று (27) அதிகாலை ஒரு மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தவசிகுளம் - மிருசுவில் பகுதியைச் சேர்ந்த இமானுவேல் ஜேசுரட்ணம் (வயது 79) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அமிர்தலிங்கத்தின் 96ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை யாழ்ப்பாணத்தில்!
(எஸ் தில்லைநாதன்)
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்தநாள் தின நினைவுப் பேருரை நிகழ்வு நேற்று (27) ஞாயிறு மாலை 4.00 மணிக்கு யாழ்.மத்திய கல்லூரிக்கு அண்மையில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு - கிழக்கு மாகாணசபையின் முன்னாள் செயளாளர் கலாநிதி கா. விக்கினேஸ்வரன் அமிர்தலிங்கத்தின் நினைவுப் பேருரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி விக்னேஸ்வரன் உட்படப் எனப் பலர் கலந்துகொண்டனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவை 3 குழந்தைகள் பிரசவித்த தாய்!
(எஸ் தில்லைநாதன்)
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று தாய் ஒருவருக்கு ஒரே தடவையில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளன.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினரே இந்த தாய்க்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து, மூன்று குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

யாழ். சங்கிலியன் வீதியில் அதிகாலை வீடு புகுந்து கத்திமுனையில் கொள்ளை!
(எஸ் தில்லைநாதன்)
யாழ். மாவட்டத்தில் கத்தி முனையில் தங்கநகைகள் கொள்ளையிடும் சம்பவங்களின் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலையும் சங்கிலியன் வீதியில் உள்ள பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களின் வீட்டில் 20 பவுண் நகையும் ஒரு தொகை பணமும் திருடப்பட்டுள்ளது
யாழ். மாவட்டத்தில் இரவு வேளைகளில் வீடுடைத்து நுழைந்து, வீட்டில் உள்ளவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் மூன்று சம்பவங்கள் இவ் வாரம் பதிவாகியுள்ளன.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியிருந்த நிலையில், அதற்கு அண்மையாக நேற்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கிலியன் வீதியில் ஒரு வீட்டில் கத்தி முனையில் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
அந்த வீட்டின் கணவன்-மனைவி இருவரும் உடுவில் பிரதேச செயலகம், நல்லூர் பிரதேச செயலகம் ஆகியவற்றில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள். வீட்டின் பின் கதவை உடைத்து உள்நுழைந்த முகத்தை மறைத்த மூவரடங்கிய கும்பல் வீட்டில் அறைக்குள் உறக்கத்தில் இருந்த மகனை எழுப்பி கையையும் காலையும் பிணைத்து கட்டிவைத்து தாக்கி கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டிலிருந்த 20 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் திருட்டு இடம்பெற்ற வீட்டுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கடந்த புதன்கிழமையிலிருந்து தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை
நடனமாடிக்கொண்டு இருந்தவர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு!
(எஸ் தில்லைநாதன்)
மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.
அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அதன்பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சோடா கொம்பனி வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (வயது 61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் திஸ்ஸ அத்தநாயக்க
(எஸ் தில்லைநாதன்)
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கெண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்காவின் பங்குபற்றலுடன் நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் சுகாதாரத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
நேற்று முற்பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)