
posted 6th August 2023

பதவியேற்பு
(ஏ.எல்.எம்.சலீம்)
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் புதிய பிரதேச செயலாளராக சோ. ரங்கநாதன் பதவியேற்றுக் கொண்டார்.
இவர் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் மற்றும் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகங்களில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், கலாசார உத்தியோகஸ்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு புதிய செயலாளரை வரவேற்றனர்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
(ஏ.எல்.எம்.சலீம்)
நிந்தவூர் மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையத்தில் முழுநேர மற்றும் பகுதிநேரக் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மேற்படி பயிற்சி நிலையக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, சான்றிதழ்களை வழங்கினார்.
இங்கு உரையாற்றிய பைசல் காசிம் எம்.பி., பல்மொழி அறிவுடனான தொழிற்கல்வியின் முக்கியத்துவம் அதனூடாக இளைஞர், யுவதிகள் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் பற்றி குறிப்பிட்டார்.
அரச அங்கீகாரத்துடனான தேசிய தொழிற் தகைமை (என்.வி.கி.) சான்றிதழ்களை வழங்கும் 9 முழுநேர பயிற்சிநெறிகளைக் கொண்டியங்கும் நிந்தவூர் - மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில், ஆங்கிலம் உள்ளிட்ட மேலும் பல பகுதிநேர பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.

நடமாடும் சேவை
(ஏ.எல்.எம்.சலீம்)
மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் வாழும் மத்திய தர வர்க்க மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நடமாடும் சேவை போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் சோமசுந்தரம் ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாலையர்கட்டு மற்றும் சின்னவத்தை பிரதேச பயனாளிகள் கலந்துகொண்டு தமது காணிகளின் உரிமம், உரித்து மற்றும் காணிகளின் ஆவணங்கள் போன்ற பிணக்குகள் தொடர்பான தீர்வைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி. எம்.ஆர்.சி. தசநாயக்க, உதவிப் பிரதேச செயலாளர் வி. துலாஞ்சனன் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக காணிக் கிளை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மூதூர் 17 பேர் படுகொலை யாழில் நினைவேந்தப்பட்டது
எஸ் தில்லைநாதன்
மூதூர் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளி (04) யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கடந்த 2006 ஓகஸ்ட் 4ஆம் திகதி அரச கட்டுப்பாட்டிலிருந்த திருகோணமலை - மூதூரில் பிரான்சின் வறுமைக்கு எதிரான அரச சார்பற்ற அமைப்பை சேர்ந்த 16 தமிழர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் உள்ளடங்கலாக 17 உள்ளூர் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது நினைவுகொள்ளத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)