
posted 23rd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
"தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்!
மட்டக்களப்பு கல்லடியிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் "தென்றல்" சஞ்சிகையின் 60ஆவது இதழ் வெளியீடும், 50 கலைஞர்கள் கௌரவிப்பும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
"தென்றல்" சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம். கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இங்கு வெளியீடு செய்யப்படவுள்ள "தென்றல்" சஞ்சிகையின் 60ஆவது மலரின் முதல் பிரதியினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவரும், கொடைவள்ளலுமான விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி பெற்றுக் கொள்வார்.
60ஆவது மலர் தொடர்பான அறிமுகவுரையினை "தென்றல்" சஞ்சிகையின் ஆசிரியர்பீட உறுப்பினர் இ. கோபாலபிள்ளை நிகழ்த்தவுள்ளார்.
இதன்போது நாடளாவிய ரீதியாகத் "தென்றல்" சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் தமது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் 50 பேர் "வீசுதென்றல்" விருது மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் "தென்றல்" கொடியேற்றப்பட்டுத் "தென்றல்" கீதம் இசைத்தலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)