
posted 22nd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
குடிதண்ணீரின்றி தவிக்கும் அவலம்
தொடரும் கடும் வறட்சி நிலையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடியமடு, பாவக்கொடிச்சேனை உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிதண்ணீரின்றி தாம் தினமும் சிரமப்படுவதாகவும், குடிதண்ணீருக்காக மிக நீண்ட தூரம் பயணித்து அதனைப் பெற்றுக் கொள்ளவேண்டி துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாகவும் கடந்தகால யுத்த பாதிப்புக்களை எதிர்கொண்ட அந்த மக்கள் தினமும் அதிகாலை வேளையில் குடிதண்ணீர் எடுப்பதற்காக மிக நீண்ட தூரம் கால்நடையாகச் செல்லும்போது காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உட்படுவதாகவும், தொடர்ந்து அச்சத்துடன் பயணித்து குடிதண்ணீரைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது பிள்ளைகள் உரிய நேரத்துக்கு பாடசாலைக்குச் செல்வதில் சிரமம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தொடரும் வறட்சி நிலைமை காரணமாக மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 2000இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் பிரதான தொழிலாக காணப்படும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பும், என்பன இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கால்நடைகளுக்குரிய பச்சைப் புற்கள் தற்போது கருகிய நிலையில் காணப்படுவதாகவும், கால்நடைகள் குடிதண்ணீர் இன்றி அலைந்து திரிவதாகவும் தெரிவிக்கும் ஏனையோருக்கு வழங்கப்படுவது போன்று குழாய் மூலமான குடிதண்ணீரைப் பெற்றுத்தர துறைசார்ந்தவர்கள் உடன் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகள் வறட்சி காரணமாக முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பயன்தரும் மரங்களும், பாதிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் நீண்ட தூரம் பயணித்து குளிப்பதற்குச் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பன்ச்சேனை, கரவெட்டி, நெடியமடு, தாண்டியடி, காந்திநகர், உன்னிச்சை, உள்ளிட்ட பல கிராம மக்கள் இந்த வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குடிதண்ணீர் வழங்கல் திட்டம் அந்த மக்கள் வாழ்கின்ற, வவுணதீவில் காணப்படுகின்றபோதிலும், அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள கிராம மக்களுக்கு அந்த திட்டத்தினூடாக விநியோகிக்கப்படும் குடிதண்ணீர் கிடைக்காமல் அவர்கள் காட்டு யானை தாக்கத்துக்கு உள்ளாவதும் தொடர் கதையாகவே இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு உரிய குடிதண்ணீர் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)