
posted 29th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
காத்திரமான பங்களிப்பு
தென்கிழக்கு பல்கலைக்கழக உருவாக்கத்திற்காக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு சகோதரர் மயோன் முஸ்தபா அவர்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
1990களில் வடக்கு, கிழக்கில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக கிழக்கு மற்றும் யாழ் பல்கலைக் கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இதனால் முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாக மாறியிருந்தது.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை எம்மால் உணரப்பட்டது. இதனை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களாகிய நாங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.
எமது போராட்டங்களை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினருக்கும் தெளிவுபடுத்துவதற்கும் தேசியமயப்படுத்துவதற்கும் புத்தகங்களை அச்சடித்து, விநியோகிக்க வேண்டியிருந்தது. இத்தேவையை சகோதரர் மயோன் முஸ்தபா அவர்களிடம் எடுத்துச் சொன்னபோது, அதற்கு அவர் நிதியுதவியளித்து, எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தமையை மாணவர் சமூகத்தினரால் என்றும் மறந்து விட முடியாது.
மேலும், 1980 களில் உலகம் கம்பியூட்டர் யுகத்திற்குள் பிரவேசித்தபோது இலங்கையில் அதனை அறிமுகப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மயோன் கம்பியூட்டர் கற்கை நிலையங்களை நிறுவியதுடன் 1000 புலமைப் பரிசில் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, பொருளாதார வசதியற்ற மாணவர்களும் இலவசமாக கம்பியூட்டர் பாட நெறியை கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதனால் எமது கிழக்கு மாகாண மாணவர்களும் கம்பியூட்டரை கற்றுத்தேர்ந்து, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னணி நிறுவனங்களில் பெறுமதியான தொழில்வாய்ப்புகளை பெற்றுப் பிரகாசிப்பதற்கு மயோன் முஸ்தபா அவர்கள் வழிகோலியிருந்தார்.
பொதுவாக எமது மாணவர்களின் கல்விக்காகவும் வறிய மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் சமய, கலாசார மேம்பாட்டுக்காகவும் தனது சொந்த பொருளாதாரத்தின் ஊடாக அவர் ஆற்றிய மனித நேயமிக்க உன்னத பணிகள் காலத்தால் அழியாதவையாகும்.
அவரது இப்பணிகள் யாவும் சதக்கதுல் ஜாரியா எனும் நிரந்தரமான நன்மைகளை அன்னாரது கப்று வாழ்விலும் மறுமையிலும் அள்ளிச் சொரியும் என்பதில் ஐயமில்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரது நற்பணிகளையும் சமூக சேவைகளையும் இபாதத்களையும் பொருந்திக் கொண்டு மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக.
மேலும், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு வல்ல இறைவன் சகிப்புத்தன்மையையும் சக்தியையும் வழங்குவானாக. ஆமீன்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)