
posted 7th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கல்முனையில் ஐ.தே.க.வின் புத்தெழுச்சி நிகழ்வு
ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து, கட்சிக்கு புத்துயிரளிக்கும் விசேட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) கல்முனை அல்பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே, முன்னாள் பிரதி அமைச்சர்களான மயோன் முஸ்தபா, அனோமா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீல், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் மற்றும் செயற்பாட்டாளர்களான பொறியியலாளர் எம். சர்வானந்தன், எம்.எம். முஹீஸ், உபாலி அஸீஸ் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
நீண்ட காலமாக செயலிழந்து போயிருந்த கட்சியின் கல்முனை தொகுதிக்கான மத்திய குழுவுக்கு சிறிகொத்தவினால் நிமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு இதன்போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதன் பிரகாரம் இம்மத்திய குழுவின் உப தவிசாளர்களாக எம்.எம். முஹீஸ், எம். சர்வானந்தன், இணைச் செயலாளர்களாக ஏ.எச்.எச்.எம். நபார், றிஸ்லி முஸ்தபா, பொருளாளராக ஏ.எம். ஜெமீல் ஆகியோருடன் ஐவர் உறுப்பினர்களாகவும் தெரிவாகியுள்ளனர்.
கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படுபவர் இதன் தவிசாளராக செயற்படுவார் எனவும் இம்மத்திய குழு கட்சியின் தொகுதிக்கான அதிகார சபையாக செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கட்சியில் நீண்ட காலமாக அங்கம் வசிக்கும் மூத்த செயற்பாட்டாளர்கள் பலர் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)