
posted 28th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஈ.பி.எவ் நிதியில் கைவைக்காதே! யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று திங்கள் (28) முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முனைவதன் மூலம் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் 25 இலட்சம் உழைக்கும் வர்க்க அங்கத்தவர்களின் ஒரேயொரு ஓய்வூதியச் சேமிப்பை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த அரசாங்கம் முயல்கின்றது என்றும், பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையின்படி இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியக் கணக்குகளின் மீது சுமத்தப்படும்போது அனைத்து ஊழியர்களினதும் சேமிப்புக்களில் இருந்தும் அரைவாசித்தொகை (50%) எதிர்வரும் 16 வருட காலப்பகுதியில் இல்லாமற்போகும் அபாயம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அரச ஊழியரின் ஓய்வூதிய நிதியையும் இவ்வாறு கையாள அரசாங்கம் முற்படுகின்றது. இதன் மூலம் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவர்களுக்கு நிதி ரீதியான உடனடிப் பாதிப்பும் நீண்ட காலத்தில் முழுமையாக இவ்விரு நிதிகளும் கிடைக்கபெறாத அபாய நிலையும் உள்ளது எனவும் போராட்டகாரர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம், வடமாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம், வடமாகாண கால்நடை போதானாசிரியர் சங்கம், ஶ்ரீ லங்கா தபால் தொலைதொடர்பு சேவை உத்தியோகத்தர் சங்கம், வடமாகாண அரச சாரதிகள் சங்கம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் ஆகிய 9 தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)