
posted 6th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
உறவுகளின் துயர் பகிர்வு
13வது திருத்தச்சட்டம்
13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீதமான முஸ்லிம்களுக்குரிய காணிகள் வழங்கப்படுவதற்கு தமிழ் அதிகாரிகள் விடுகிறார்கள் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்வது முரண்பாடான ஒன்றாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கூறியதாவது,
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரவூப் ஹக்கீம் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்கிறார். இதை இவர் சுயபுத்தியுடன் சொல்கிறாரா என்று தெரியவில்லை.
அவ்வாறு 13 முழுமையாக அமுல் படுத்தப்படும் போது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பன மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்போது நிச்சயம் இது தமிழ், முஸ்லிம் முரண்பாடுகளை தொடர்ச்சியாக்குமே தவிர முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது.
தற்போது காணி அதிகாரம் மத்திய அரசின் கீழ் உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீதமான முஸ்லிம்களுக்கு 10 வீதத்துக்கும் குறைவான் நிலமே இருப்பதாகவும் அரச நிலம் முஸ்லிம்களுக்கு கிடைக்க தமிழ் அதிகாரிகளே தடையாக உள்ளனர் என புலம்பும் ஹக்கீம், காணி அதிகாரமும் அவர்களுக்கு கிடைத்தால் என்ன நடக்கும் என்று தெரியாத சின்னப்புள்ளையாக இருக்கிறார்.
அதே போல் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டால் வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் நிச்சயம் தமிழ் பொலிசாரே அதிகம் அதிகாரத்தில் இருப்பர் என்பது ஹக்கீமுக்கு தெரியாதா?
இத்தகைய தமிழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் கல்முனை பஸார் கூட ஆக்கிரமிக்கப்படும் நிலையும் ஏற்படும்.
அதன் பின்னர் குய்யோ முறையோ என மத்திய அரசுக்கு முறையிட்டாலும் எதுவும் நடக்காது.
இதனை நாம் ஒன்றும் கற்பனையில் சொல்லவில்லை. 1988 வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்ட போது மாகாண தமிழ் பொலிசாரால் மாகான முஸ்லிம் பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டது கிழக்கை சாராத ரவூப் ஹக்கீமுக்கு தெரியாமல் இருக்கலாம், எமக்குத்தெரியும்.
ஆகவே 13வது சட்டப்படி மாகாண சபை தேர்தலை நடத்தும்படி சொல்ல முடியுமே தவிர பொலிஸ், காணி அதிகாரம் மாகாண சபைக்கு வழங்கப்படுவதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி முற்றாக எதிர்க்கிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)