
posted 30th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

யாழ்ப்பாணம் புத்தூர் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பிகை மஹா கும்பாபிஷேக பெருவிழா
(எஸ் தில்லைநாதன்)
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி பிற்பகல் 5.15 ச, 6 மணிவரையான சுபவேளையில் கர்மாரம்பம் ஆரம்பமாகவுள்ளது.
மூன்றாம் திகதி காலை 8 மணிமுதல் மாலை நான்கு மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெறவுள்ளது.
நான்காம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6.09 மணி தொடக்கம் 7.31 மணிவரையுள்ள சுப மூர்த்தவேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறும்.
மண்டலாபிஷேகம் நான்காம் திகதி முதல் பதின்நான்காம் திகதி வரை இடம்பெற்று, எதிர்வரும் பதினைந்தாம் திகதி காலை 10 மணிக்கு 109 சங்காபிஷேகமும் விசேட பூஜையும் இடம்பெறும்.
ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு கலை, பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

போதையொழிப்புப் பேரணி
(ஏ.எல்.எம்.சலீம்)
இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் அதன் அனுசரணை வலையமைப்பான "இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் போதையொழிப்புப் பேரணியும், வீதி நாடகமும் கல்முனையில் இடம்பெற்றது.
கல்முனை பிரதான வீதியூடாக சென்ற பேரணி பொதுச்சந்தையை ஊடறுத்து கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்தை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து அக்கரைப்பற்று அருவி கலை மன்ற கலைஞர்களினால் போதையொழிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், பெண்கள் கொடுமை போன்றன உள்ளடக்கிய கருவை கொண்ட வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது.
பொலிஸ் உத்தியோகஸ்தர் மரணம்
(எஸ் தில்லைநாதன்)
காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ம் திகதி முறிகண்டிக்கும், இரணைமடு சந்திக்கும் இடையில் ஏ9 வீதியில் இரவு 10.30 மணியலவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பார ஊர்தியுடன் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட மாட்டுக்கு இடம் கொடுத்து செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 29.08.2023 அன்று அதிகாலை உயிரிலந்துள்ளார்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செனவரட்ன எனவும் அவர் திருமணமாகி ஒரு வருடகாலமேயாகும் என்ற விசாரணையில் தெரியவந்தது.
இறந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கீழ் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இருவர் படுகாயமடைந்தனர்
(ஏ.எல்.எம்.சலீம்)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ஆம் கட்டைப் பகுதியில் மீன் ஏற்றி வந்த லொறி குடைசாய்ந்ததில் இருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறி நிலாவெளி பிரதேசத்திலிருந்து கந்தளாய்க்கு மீன் ஏற்றி வந்தபோது 87 ஆம் கட்டைப் பகுதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாகவும், இவ்விபத்தில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த வாகனச் சாரதியும் உதவியாளரும் படுகாயங்களுடன் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
2 இளைஞர்கள் படுகாயம்
(ஏ.எல்.எம்.சலீம்)
மட்டக்களப்பு - வாகரைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (29) இரவு மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள உசன ஏற்றம் எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரைப் பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிய போது பட்டா ரக வாகனத்தில் மோதியுள்ளனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)