
posted 21st August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

மக்களின் பார்வைக்கு
(ஏ.எல்.எம்.சலீம்)
பாதுகாக்கப்பட்ட திருகோணமலை பிரட்ரிக் கோட்டையை பார்வையிடுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் சுற்றுலா பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
மத்திய கலாசார நிதியத்தின் திருகோணமலை திட்டத்தின் ஊடாக திருகோணமலை பிரட்ரிக் கோட்டையின் பாரம்பரிய முகாமைத்துவ செயல்பாடுகள் கடந்த சில வருடங்களாக பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரு லொறிகள் மோதி விபத்து
(ஏ.எல்.எம்.சலீம்)
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை வந்த லொறி ஒன்று நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
திருகோணமலை - ஹொரவபொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ். திலீபன் (38) என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியே விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
விபத்துக் குறித்து மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர்
(எஸ் தில்லைநாதன்)
பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காணி உரிமையாளர்களால் கிணறு துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி போலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் இன்றைய தினம் 21.08.2023 நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடி படையினரால் கிணற்றில் இருந்து வெடி பொருட்களை மீட்கும் அகழ்வு பணியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பல்வேறு வகையான வெடிக்காத வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மீனவர்களின் படகுகள் தண்ணிமுறிப்பில் தீக்கிரை!
(எஸ் தில்லைநாதன்)
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் தண்ணிமுறிப்பு குளப் பகுதியில் வைத்து 6 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குரிய இழப்பீட்டினை வழங்கவேண்டும் எனவும் மீனவர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர்க் கந்தன் கொடியேற்றம்
(எஸ் தில்லைநாதன்)
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை (21) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் இடம்பெற்றது.
பெருமளவான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அங்கப்பிரதட்சணம் உட்பட பல்வேறு நேர்த்திகளில் ஈடுபட்டனர்.
செங்குந்த மரபினரால் வடிவமைக்கப்பட்ட கொடிச்சீலை பாரம்பரிய முறைப்படி நேற்று வேல் மடம் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறிய தேரொன்றில் எடுத்து வரப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கையளிக்கப்பட்டது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தத் திருவிழா வரையான 25 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

சீனிப் பாணியை தேன் எனக்கூறி விற்றவர் கைது
(ஏ.எல்.எம்.சலீம்)
சீனிப்பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காத்தான்குடியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கைதானவரிடம் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட சீனிப்பாணிகளைக் கொண்ட போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி அந்த இடத்திலேயே சுகாதாரப் பகுதியினரால் அழிக்கப்பட்டன.
புதிய காத்தான்குடி அல் அக்சா பள்ளிவாசலுக்கு வருகின்ற உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி குறித்த நபர் சீனி பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி ஒரு போத்தல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)