
posted 13th August 2023
உறவுகளின் துயர் பகிர்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

போராட்டம்
(ஏ.எல்.எம்.சலீம்)
வடக்கு, கிழக்கு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு நீதி கோரி 2000 ஆவது நாளாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தம்பிலுவில் விஷ்ணு கோவில் முன்பாகவிருந்து அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியூடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் சந்திப்பு
(ஏ.எல்.எம்.சலீம்)
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் அவர்களை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமிர்த்தம் சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் கல்வியங்காட்டில் சடலமாக மீட்பு
எஸ் தில்லைநாதன்
கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 52 வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சனி (12) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்று வெள்ளி (11) திருமணச் சடங்குக்கு சென்றவேளை குடும்பஸ்தர் தனியாக வீட்டில் இருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை உறவினரொருவர் இவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும், இதனால் குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 52 வயதான கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)