
posted 23rd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கிழக்கில் வட்டமேசை மாநாடு
கிழக்கு மாகாணத்தில் காணி விநியோகம், அரச நிர்வாகம், நிதி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பாக கலந்துரையாடி, தீர்வுகளை எட்டுவதற்காக இம்மாகாணத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வட்டமேசை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு, அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்துள்ளார்.
இனங்களிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு, நம்பிக்கை ஏற்படாத வரை 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அழுப்படுத்துவது சாத்தியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டம் தொடர்பான தனது முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வை முன்னிறுத்தியே அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அனைத்து சமூகத்தினரும் விட்டுக் கொடுப்புகளுடன் அர்ப்பணிப்புகளை செய்வதற்கு தயாராக வேண்டும்.
இன சமத்துவமும், தனிநபர் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மாகாண அரச நிர்வாக செயற்பாடுகளில் அனைத்து சமூகங்களினதும் வகிபாகங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
இனங்களிடையே புரிந்துணர்வின்மை, சந்தேகம், அவநம்பிக்கை மேலோங்கியிருக்கின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மத, சமூக குழுக்களிடையேயும் பரஸ்பரம் புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டமானது, அர்த்தமுள்ள வகையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் முதலில் இவ்வாறான அடிப்படை விடயங்கள் நிறைவு செய்யப்படுவது அவசியமாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தனது முன்மொழிவின் ஊடாக ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)