
posted 19th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அமெரிக்க-இலங்கை பங்காண்மை
அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் கட்டளையின் (USINDOPACOM) அனுசரணையுடன் இலங்கை கடற்படையினால் ஓகஸ்ட் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்தப்பட்ட 12ஆவது வருடாந்த இந்தோ - பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றமானது (IPESF) ஆசிய - பசிபிக் பிராந்தியம் முழுவதுமுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகப் பணியாற்றும் தரப்பினரை ஒன்றிணைத்தது. 28 நாடுகளின் பங்கேற்புடன் இலங்கையினால் நடத்தப்பட்ட முதலாவது IPESF மன்றமான இது “ஒத்துழைப்பின் ஊடாக சுற்றுச்சூழல் மீள்தன்மை” எனும் தொனிப்பொருளின் கீழ் கூட்டு ஒத்துழைப்பின் மூலமாக பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தியது. இந்த நிகழ்வானது காலநிலை பாதுகாப்பு, வளங்களின் நிலைபேறானதன்மை, பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாற்றம் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை, பாதிப்புகளிலிருந்து மீண்டெழும் தன்மையுடைய சமூகங்களைப் பேணிவளர்த்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் ஒரு பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களில் அமெரிக்காவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.
“பெரிய, சிறிய அனைத்து நாடுகளும் வெற்றி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே உலகம் தொடர்பான எமது தொலைநோக்காகும். நீங்கள் ஃபிஜியில் அல்லது அவுஸ்திரேலியாவில் அல்லது மங்கோலியாவில் அல்லது இலங்கையில் என எங்கு இருந்தாலும், நாம் அனைவரும் பாதிக்கப்படக்கூடியவர்களே. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள நாடுகளைத் தாக்கும் தீவிரமான காலநிலை உச்சநிலைகளை நாம் காண்கிறோம், நாம் அனைவரும் அதன் பாதிப்புகளை உணர்கிறோம். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையானது உணவுப் பாதுகாப்பைப் பாதித்துள்ளது. இவ்வாறான பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் புதுமையான வழிகளைக் கண்டறிவதற்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைவது இன்றியமையாததாகும்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், திங்கட்கிழமை தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.
“தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக நாம் எவ்வாறான முன்னேற்றங்களை அடைந்தாலும், சாதித்தாலும், இயற்கையானது எப்பொழுதும் அதன் தனித்துவமான ஆச்சரியங்களுடன் அவையனைத்தையும் விஞ்சி நிற்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆகையினால் மனிதன் இன்னும் அதிக விழிப்புடன் இருத்தல் அவசியமாகும். எனவே, அறிவாற்றல் உடையவர்கள் என்ற வகையில் நாம் நமது நாகரிகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒரே மாதிரியாக பேணிப்பாதுகாப்பதை உறுதிசெய்யக்கூடிய ஒரு உறவை உருவாக்கக்கூடிய வகையில் பகுத்தறிவுடன் நடந்து கொள்வதைத் தொடர வேண்டும்” என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா திங்கட்கிழமை கூறினார்.
நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வு முழுவதும், நிகழ்வில் பங்குபற்றியோர், காலநிலை மாற்றம், நிலப் பாதுகாப்பு, கடல் மற்றும் நீர் பாதுகாப்பு மற்றும் நகரமயமாக்கலின் பாதுகாப்பு விளைவுகள் போன்ற விடயப்பரப்புகளில் அறிவினைப் பகிர்வதற்கும் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரப்புவதற்குமான சூழலை மேம்படுத்தக்கூடியவாறு முன்வைப்புகள், குழுநிலை கருத்தாடல்கள் மற்றும் கலந்துரையாடும் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஒரு முழுமையான அணுகுமுறையைத் தழுவியதன் மூலம், தீவிரமான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான செயற்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்குவதற்கு IPESF வசதிசெய்தது. பிராந்தியம் முழுவதும் சுற்றுச்சூழல் மீள்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்குவதில் செயற்திட்ட அபிவிருத்தி மற்றும் பணிக்குழு அபிவிருத்தி செயலமர்வுகள் ஒரு முக்கியமான பங்கினை ஆற்றின.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)