
posted 8th August 2022
மண்ணெண்ணெய் இன்மையினால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என குருநகர் கடற்தொழில் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஜூலியன் சகாயராஜா தெரிவித்தார்.
தற்போது வட பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடி நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடபகுதியை பொறுத்தவரை எரிபொருள் பிரச்னை ஒரு முக்கியமான பிரச்சனையாகக் காணப்படுகின்றது. கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதற்கு பிற்பாடு எந்தவிதமான மண்ணெண்ணெயும் வழங்கப்படவில்லை.
டீசல் வாரத்துக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது. கடற்தொழில் அமைச்சரின் முயற்சியின் பயனாக மயிலிட்டித் துறைமுகத்தில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு 2000 லீற்றர் டீசல் வழங்கப்படுகின்றது.
இருந்தபோதிலும், குருநகரை பொறுத்தவரை 400 இழுவைமடி தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். 450 சிறு படகுத் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். சிறிய படகுகள் மண்ணெண்ணெயில் இயங்குவன. குறிப்பாக தற்போதைய சூழலில் சிறுபடகுத் தொழில் ஈடுபடுபவர்கள் மிகவும் வறுமை கோட்டுக்குட்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள்.
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மீனவர் தொழிலாளர்களும் மண்ணெண்ணெய் இல்லாமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 1300 ரூபாய்க்கு கறுப்புச் சந்தையில் வாங்கி தொழிலுக்கு செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. அந்த 1300 ரூபாய்க்கு வாங்கிய எண்ணெய் எவ்வாறு இலங்கை கடற்பரப்புக்குள் கொண்டு வரப்படுகின்றது? எவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றது என்பது அடுத்த கட்டம்.
ஆனால் ஒரு தொழிலாளி தான் தொழிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக 1300 ரூபாவுக்கு ஒரு லீற்றர் எண்ணெய் வாங்கி சென்று தனது வாழ்வாதாரத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY