
posted 12th August 2022
மடு பெருவிழாவுக்கு அதிகமானவர்கள் வருகை தந்து கூடாராங்கள் அமைத்து விறகுகளில் சமைத்து வருவதால் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருவோர் தங்களுடன் எரிபொருளையும் கொண்டு வருவதால் தீ பற்றாத நிலையில் எரிபொருளை மிகவும் பாதுப்புடனும், பௌத்திரமாகவும் வைத்திருக்க வேண்டும் என மன்னார் அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.
ஆவணி (15.08.2022) மடுத் திருவிழா தொடர்பாக மன்னார் அரச அதிபர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்;
எதிர்வரும் 15 ந் திகதி (15.08.2022) நடைபெற இருக்கும் மருதமடு அன்னையின் திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் செவ்வாய் கிழமை (09.08.2022) மடுத்திலத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையுடன் இணைந்து திணைக்களத் தலைவர்கள், அனைத்து பாதுகாப்பு தரப்புடன் இணைந்து கூட்டத்தை நடாத்தி இருந்தோம்.
இதன் அடிப்படையில் இம்முறை அதிகமான பக்தர்கள் இவ் ஆவணி பெருவிழாவுக்கு வருகை தர இருப்பது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
தற்பொழுதுள்ள சூழலில் கொவிட் 19 தொற்று நோய் அதிகரித்து வருவது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆகவே இவ் பெருவிழாவுக்கு வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் எரிபொருள் பிரச்சனை உள்ளதால் வெளி மாவட்டங்களிலிருந்து இங்கு வருகைதரும் பக்தர்கள் தங்கள் பிரயாணத்திற்கென மேலதிகமான எரிபொருள் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், கொண்டுவரும் எரிபொருளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
இவ் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் திணைக்களங்களுடன் இணைந்து திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்து நிற்கின்றோம் என ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)