மக்களின் வேதனைகள் சோதனைகள் நீங்க இந்நாட்களில் மருதமடு அன்னையை நோக்குவோம் - மன்னார் ஆயர்

நாடு அரசியல் நெறுக்கடியிலும், பொருளாதார நெறுக்கடியிலும் இருந்து விடுபடவும், மக்களுக்க இருந்துவரும் வேதனைகள், சோதனைகள் நீங்கி யாவரும் அமைதியுடனும், சமாதானத்துடனும் வாழவும் இந்த அரசும், அரச தலைவர்களும் உதவி புரிய வேண்டும் என்றும் நாம் மருதமடு அன்னையை நோக்கி இந்நாட்களில் வேண்டுவோம் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் எதிர்வரும் மருதமடு அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற ஆயத்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

இவ் வருடம் ஆவணி 15 ந் திகதி (15.08.2022) நாங்கள் மருதமடு செபமாலை மாதாவின் திருவிழாவை தொடர்ந்து வழமைபோன்று கொண்டாட இருக்கின்றோம்.

இதற்கு ஆயத்தம் செய்யும் வண்ணம் இன்று திங்கள் கிழமை (01.08.2022) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் இது தொடர்பான ஒரு கலந்துரையாடலை நடாத்தினோம்.

இக் கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாவுக்கான இவ் ஆய்த்ததக் கூட்டத்துக்கு பலதரப்பட்ட இது தொடர்பான சகல திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் நாங்கள் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். வழமைபோன்று ஆவணிமாத மடு பெருவிழாவை பெருந் திரலான பக்தர்களுடன் கொண்டாடுவதற்கான எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.

சென்ற வருடம் (2021) கொரோனா தொற்று நோய் காரணமாக இவ் விழாவின்போது ஒரு திருப்பலிக்கு 400 பேர் என்ற விகிதத்திலேயே பக்தர்கள் கலந்து கொண்ட நிலை எற்பட்டு இருந்தது.

ஆனால் இவ் வருடமும் மீண்டும் கொரோனா தொற்று நோய் தலைதூக்கும் நிலையிலே இவ் விழாவை கொண்டாடுவதற்கான எற்பாடுகளை மேற்கொண்டுள்ளளோம்.

ஆகவே நாம் சுகாதார நடைமுறைகளை கவனத்தில் எடுத்து இவ் விழாவில் கலந்து கொள்வோர்களாகிய நாம் கட்டாயமாக முகக் கவசம் அணிந்தவர்களாக இத் திருவிழாவில் பங்கெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆகவே இத் திருத்தளத்துக்கு வரும் அனைத்து பக்தர்களும் இவ்வாறான நடைமுறையை கவனத்தில் எடுத்து வருகை தருமாறு மிக பணிவுடன் வேண்டி நிற்கின்றேன்.

இப்பொழுது இவ் விழாவில் கலந்து கொள்வதற்காக வெவ்வேறு பகுதிகளிலுள்ள மக்கள் இங்கு இருக்கும் வீடுகளில் தங்கி செல்வதற்காக தனதாக்கிக் கொண்டார்கள்.

அத்துடன் இப்பொழுதே பலர் இங்கு வந்து கூடாரம் அமைத்து விழாவில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டு இருக்கின்றார்கள்.

நாம் இத் திருத்தளத்துக்கு ஒரு திருயாத்திரிகர்களாக வரும் காரணத்தினால் நாம் இத் திருத்தளத்தை தூய்மையுடன் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

எனவே இத் திருத்தளத்துக்கு வருவோர் நற்சுகத்துடன் இருந்து இந்த மடு அன்னையின் பரிந்துரையை பெற்று யாவரும் அன்னையின் அருள்பெற்று செல்ல ஆசிக்கின்றோம்.

அத்துடன் எந்தவித சண்டை சச்சரவு இன்றி அமைதியை இழக்காமல் மது மற்றும் போதை வஸ்து பாவனைகளிலிருந்து விடுபட்டு யாத்திரிகர்களாக வருவோர் இவ்வாறான தீய செயல்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டு நிற்கின்றோம்.

இத் திருதளத்துக்கு வருவோர் நிறைய ஆசீர்பெற்று குடும்பங்கள் மத்தியில் நல்ல உறவுகள் நிலைக்கவும், சமூதாயத்தில் வேற்றுமைகள் நீங்கவும், நாம் மருதமடு அன்னையிடம் விஷேட வேண்டுதலாக கேட்போம்.

எமது நாடு இந்த அரசியல் நெறுக்கடியிலும், பொருளாதார நெறுக்கடியிலும் இருந்து விடுபடவும், மக்களுக்க இருந்துவரும் வேதனைகள் சோதனைகள் நீங்கி யாவரும் அமைதியுடனும், சமாதானத்துடனும் வாழவும் இந்த அரசும் அரச தலைவர்களும் உதவி புரிய வேண்டும் என்றும் நாம் மருதமடு அன்னையை நோக்கி இந்நாட்களில் வேண்டுவோம்.

மக்களின் வேதனைகள் சோதனைகள் நீங்க இந்நாட்களில் மருதமடு அன்னையை நோக்குவோம் - மன்னார் ஆயர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)