மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்

இலங்கையில் மக்களின் வாழ்க்கைச் செலவு விஷம்போல் ஏறியுள்ள நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் நலன் கருதி பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக எரிபொருள், எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தித்து, விலைக் குறைப்பை செய்துள்ளதுடன், மக்களின் அன்றாடத் தேவையான பல அத்தியவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய விலைக் குறைப்பு பயனாளிகளைச் சென்றடைந்துள்ளதா என்பது கேள்விக் குறியாகவுள்ள போதிலும் விலைக்குறைவு அறிவிப்பு சற்று ஆறுதலையும், மகிழ்வையும் அறிவித்துள்ளது.

ஆனால் மேலும் சில அறிவிப்புக்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், விசனத்திற்குள்ளாக்கியுமுள்ளது.

குறிப்பாக மக்களின் அத்தியாவசிய பாவனைக்குரியதான மின்சாரக் கட்டணம் 10 ஆம் திகதி முதல் 75 சதவீதம் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75 வீதத்தால் அதிகரிப்படுவதகாக் கூறப்படுகின்ற போதிலும், இது மக்களால் தாங்க முடியாத சுமை என இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களின் முக்கியஸ்த்தர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளதுடன் மேலும் பல அமைப்புக்களும் கவலை வெளியிட்டுள்ளன.

இதேவேளை நீர்க் கட்டணத்திலும் மாற்றம் செய்யப்படவுள்ளதான தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. மக்கள் இச் சுமைகளைத் தாங்குவார்களா?

மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)