
posted 10th August 2022
மலையகப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவிற்கு உரித்தான நல்லதண்ணி பிரதான வீதியில் சுமார் 200 மீட்டர் தேயிலை செடிகளில் உள்ள பாரிய மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் இப்பகுதி வீதியும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப் பகுதி பாதையின் ஊடாக போக்குவரத்து செய்ய தடை விதிக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில் இருந்து வருகின்றது.
இதையிட்டு செவ்வாய் கிழமை (09.08.2022) காலை முதல் மதியம் வரை தேசிய நில ஆய்வுகள் நிறுவன அதிகாரி ஓய்வு பெற்ற ஜெனரல் சுதந்த ரணசிங்க அவருடன் கட்டிட துறை ஆய்வாளர் வைத்திய கலாநிதி கருனாரத்தின மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட உதவி அரசாங்க அதிபர் சித்திரா கமகே, மத்திய அரசின் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன் ஆகியோர் மற்றும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மோகினி எல்ல பகுதிகளில் விஜயம் செய்து அங்கு ஏற்பட்ட வெடிப்புகளை பார்வை இட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் பின்னர் தற்போது பாரிய வெடிப்புகளாக உள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரிக்கும், லக்சபான தோட்ட முகாமையாளருக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அந்த வீதியை வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்க வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கட்டளை பிறப்பித்ததுள்ள நிலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை பாரிய வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளது என ஆய்வில் தகவல் கிடைத்தது உள்ளது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன் தெரிவித்தார்.
இப் பாதை மூடப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப் பாதை மூடப்பட்டுள்ளதால் வாழமலை தோட்ட லக்சபான வீதியை வாகனங்கள் போக்குவரத்து செய்ய செப்பனிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)