
posted 31st August 2022
எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை உறுதியாக கூறவிரும்புகிறோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் 2018ஆவது நாளாக போரட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்னால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் கண்டுபிடிக்கப்படும்வரை இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். இந்தப் போராட்டத்தில், எதிர்காலத்தில் இலங்கையின் சிங்கள ஆட்சியால் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாப்பான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தில் தமிழர்களைப் பாதுகாக்கும் அரசியல் தீர்வுக்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
இலங்கை நீண்டகாலமாக ஒரு அடக்குமுறை தேசமாக இருந்து வருவதுடன், அதன் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பு மற்றும் செயலிழந்த பொருளாதாரம், கடந்த பல மாதங்களாக உலகிற்கு வேதனையுடன் தெளிவுபடுத்தப்பட்ட விடயம் மேலும் தோல்வியடைந்த நாடாக உள்ளது. தீவில் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் சுதந்திர இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தை விரும்புகிறார்கள். ஐ.நாவின் கண்காணிப்பு வாக்கெடுப்பு மூலம் இதைக் கொண்டு வருவதே சிறந்த வழி.
காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் சில பிள்ளைகள் பலவந்தமாக பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாகவும், சிலர் பாலியல் அடிமைகளாகவும் விற்கப்பட்டதை நாம் அறிவோம் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)