பலவகைச் செய்தித் துணுக்குகள்

பொருட்சேதத்தில் நின்ற வாய்த் தர்க்கம்

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் அப்பகுதியில் உள்ள புடைவை விற்பனை நிலையமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த விற்பனை நிலையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் குறித்த விற்பனை நிலையத்தின் கண்ணாடிக் கதவுகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் குறித்த புடைவை விற்பனை நிலையத்தின் உரிமையாளரும் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் புடைவை விற்பனை நிலைய உரிமையாளரினால் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



அனுமதியற்ற நேரத்தில் கடலட்டை பிடித்தோருக்கு அபராதம்
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் அனுமதிக்கப்படாத இரவு நேரத்தில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த 15 பேருக்கு தலா பத்தாயிரம் மற்றும் பதினைந்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்துக்கு முரணான வகையில் அனுமதிக்கப்படாத இரவு வேலைகளில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த 15 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் திங்கட்கிழமை (01) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இதன்போது ஒருவருக்கு பதினைந்தாயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

இதேவேளை தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டபணம் விதிக்கப்பட்டது.



கொரோனா தொற்றும், இறப்பும் அதிகரிக்கின்றது

இலங்கையில் கொரோனா தொற்றால் செவ்வாய்க் கிழமை (02) 7 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

30 - 59 வயதுக்கு இடைப்பட்ட இரு பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 ஆண்களும் இரு பெண்களுமாக 7 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணங்களுடன் நாட்டில் தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 566ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் அண்மை நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன், உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



பெண் வன்புணர்வுக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை

வவுனியா - நெளுக்குளத்தில் பெண் ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்.

செவ்வாய்க்கிழமை (02) இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட போதே நீதிவான் மேற்படி தண்டனையை விதித்தார். அத்துடன், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கவும், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பளித்தார்.

மேலும், இரு குற்றவாளிகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிடப்பட்டது.

நெளுக்குளத்தில் கடந்த 2011 மே 29 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பெண் ஒருவரை ஏற்றிச்சென்ற இருவர் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச் சாட்டுகளுக்கு நியாயமான காரணிகளை அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் முன்னிலைப்படுத்தி, குற்றச்சாட்டை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தார்.

இதற்கமைய, இரண்டு பிரதிவாதிகளையும் குற்றவாளிகள் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உறுதி செய்தார்.

இரு குற்றவாளிகளில் ஒருவரே நேற்று மன்றில் முன்னிலையாகியிருந்தார். அவருக்கான தண்டனை நேற்று முதல் நடைமுறையானது. மற்றைய குற்றவாளி இந்தியாவில் தலைமறைவாக உள்ளார். இதனால், அவரை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை உத்தரவையும் நீதிபதி பிறப்பித்தார்.



அபிவிருத்தியடையும் யாழ் சர்வதேச விமான நிலையத்தின் சூழல்

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

பலாலிக்கு சென்ற அவர் விமான நிலையத்தின் சூழலை கள ஆய்வு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான செயல் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திருந்தார்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்;

பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அப்பகுதியில் வடிகால்கள், வாகனத் தரிப்பிடங்கள், ஓய்வுப்பகுதிகள், நடைபாதைகள், மருத்துவமனை வசதிகள், சூரியசக்தி மின்சார ஒளிவிளக்குள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படவுள்ளன.

இந்தச்செயல்திட்டங்கள் அனைத்தும் சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் பொருட்டு இந்த வடிவமைப்புக்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், இச் செயற்றிட்டங்களின் பின்னர் இப்பகுதியை பொதுமக்கள் முறையாக பராமரிப்பதும் அவசியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அதிஉந்துதல் அபிவிருத்தி பிதேசமாக மாறும் முதலீட்டு வலயங்கள்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயங்களை இனங்கண்டு அதனை அதிஉந்துதல் அபிவிருத்தி பிதேசமாக மாற்றவும், வரைபடம் தயாாிக்கவும் வடக்கு மாகாண ஆளுநா் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

முதலீட்டு வலயங்கள் தொடர்பான வரைபடங்களை வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையை, துறை சார்ந்தவர்களுடன் இணைந்த வகையில் உடன் தயாாித்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 25இற்கும் மேற்பட்ட அரசாங்க நிறுவனங்கள் இணைந்துள்ளன. எனவே இத்திட்டத்தை துரிதமாக முன்னெடுத்துச் செல்ல மத்தியின் நிதி அமைச்சு மற்றும் தேசிய திட்டமிடல் செயலகத்தையும் இணைத்துள்ளதாக வடக்குமாகாண ஆளுநா் தொிவித்துள்ளாா்.

தவிர, வடக்கில் விரைவில் இனங்காணப்படவுள்ள அதி உந்தல் முதலீட்டு வலயங்கள் தொடா்பிலான முன்வரைவுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டள்ளன.

வடக்கு மாகாண முதலீட்டு வலயப் பிரதேசங்களை நோர்வே நாட்டின் முதலீட்டு திட்ட மாதிரிகளை மையமாக வைத்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.



மேலும் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்தனர்

இலங்கையில் நேற்று புதன்கிழமை கொரோனா தொற்று காரணமாக மேலும் 8 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 30 தொடக்கம் 59 வயதுக்கு உட்பட்டவர்களில் நான்கு ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட நால்வருமாக எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த மரணங்களுடன் நாட்டில் தொற்று மரணம் 16 ஆயிரத்து 574ஆக அதிகரித்துள்ளது.

இதேசமயம், நேற்று புதன்கிழமை (03) மாத்திரம் புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்து. இதன் மூலம் நாட்டில் இருவரை 6 இலட்சத்து 66 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மீண்டும் உயிர்பெறும் காங்கேசன்துறை – கல்கிசை இரவு நேர ரயில் சேவை

நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறை – கல்கிசை இடையே இரவு நேர ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் சேவை ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீள கொழும்புக்கு ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முன்னர் இரவு தபால் சாதாரண ரயில் சேவையாக நடத்தப்பட்ட இந்த சேவையை குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இணைத்து வடக்குக்கான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)