பலவகைச் செய்தித் துணுக்குகள்

பாழடைந்த வீடு - போதைப் பொருள் நுகர்வு - பெண்கள் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்று செவ்வாய் இரவு பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றினார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த இரண்டு பெண்களும் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் போதைத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



கஞ்சாவைக் கடத்தவிருந்த நபர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் 8.5 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை தாம் கைது செய்துள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நயினாதீவை சேர்ந்த 39 வயதான சந்தேக நபர் நயினாதீவிலிருந்து கொழும்புக்கு அனுப்புவதற்காகக் கஞ்சாவை கொண்டு வந்த நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயல்படும் மாவட்ட குற்றத்தடுப்பின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினர் குறித்த நபரை கைது செய்தனர்.



சீனத் தூதரம் உவந்த பல மில்லியன் ரூபா

சீனத் தூதரகத்தால் 42 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பணம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் விவரம், சீனத் தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இருப்பினும், சீனத் தூதுவர் இனப்படுகொலை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலும், யாழ். பல்கலைக்கழகத்தினுள் சீனச் சார்பு நடவடிக்கைகளை அவர்கள் வெளிப்படையாக எதிர்த்துள்ள நிலையிலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது.

சீனத் தூதரகம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு 2016ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் இந்த உதவித் தொகையை வழங்கி வருகின்றது. இந்த ஆண்டு வடக்கு-கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்களுக்கே உதவித் தொகையை வழங்கச் சீனத் தூதரகம் தீர்மானித்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்தநிலையில் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 70 மாணவர்களுக்கு மாதாந்தம் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் ஒரு வருடத்துக்கு உதவித் தொகை வழங்குவதற்காகவே மாணவர்கள் விவரம் சீனத் தூதரகத்தால் கோரப்பட்டுள்ளது.



சுயாதீனமாக செயல்படவுள்ள 13 பா. உ. கள்

அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (01.09.2022) முதல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். அத்துடன், அவர்கள் எதிர்க்கட்சியின் வரிசையிலும் நேற்று புதன் (31.08.2022) அமர்ந்தனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி தெரிவில் எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் அவருக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.

பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் சன்ன ஜயசுமண, பேராசிரியர் சரித ஹேரத், கலாநிதி நாலககொடஹேவா, கலாநிதி குணபால ரத்னசேகர, மருத்துவர் உபுல் கலப்பதி, மருத்துவர் திலக் ராஜபக்ஷ, சட்டத்தரணி டிலான் பெரேரா, சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார, கே. பி. எஸ். குமாரசிறி, லலித் எல்லாவல ஆகியோர் அடங்குவர்.

பாராளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய போது சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

தமது அணி ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தது, அதற்கான காரணங்கள் எவை என்பன உள்ளிட்ட விடயங்களை இதன் போது அவர் விவரித்தார். விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினார். அத்துடன், சுயாதீனமாக செயல்பட முடிவெடுத்துள்ள மொட்டு கட்சி எம். பிக்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டார்.

முன்னதாக, ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ விலகிய பின்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார். இதனால் மொட்டு கட்சி இரண்டாக பிளவுபட்டது.

அந்தக் கட்சி அரசாங்கம் அமைத்த பின்னர் ஏற்பட்ட இரண்டாவது பிளவு இதுவாகும். முன்னதாக, பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளிக் கட்சிகள் சுயாதீனமாக செயல்பட ஆரம்பித்தன. இந்நிலையில், பீரிஸ் தலைமையிலான தற்போதைய அணியின் பிரிவும் அரசாங்கத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)