
posted 22nd August 2022
சி. சிவமகாராஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவரும் "நமது ஈழநாடு" பத்திரிகையின் பணிப்பாளருமான சி. சிவமகாராஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இடம்பெற்றது.
தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (20) இடம்பெற்றது.
முன்னதாக தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்திலுள்ள சி. சிவமகாராஜாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவர் உமாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச. சுகிர்தன், கல்வியாளர்கள், கூட்டுறவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கூட்டுறவாளர் கௌரவிப்பு, பணியாளர் கௌரவிப்பு என்பன இடம்பெற்றதுடன் விருது வழங்கலும் இடம்பெற்றது.
2006 ஓகஸ்ட் 20 ஆம் திகதி சி. சிவமகாராஜா தெல்லிப்பழையிலுள்ள அவரின் வீட்டில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் ஒழிப்பதற்கு கவனவீர்ப்பு போராட்டம்
போதைப் பொருள் பாவனையை ஒழிக்க வலியுறுத்தி சங்கானை பேருந்து நிலையம் முன்பாக ஞாயிறுகாலை (21) கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
“சர்வதேச புகையிலை நிறுவனத்தின் வரி மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை அம்பலப்படுத்துங்கள்”
“யாழில் தடை செய்யப்பட்ட போதை ஊசி மருந்து பாவனைக்கு எதிராக அரசே நடவடிக்கை எடு”
“மது நிறுவனங்களுக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை விற்காதே”
போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினர், வலி. மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இளைஞர், யுவதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் 7 கொரோனாத் தொற்றாளர்கள்
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான 7 பேர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று அதன் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
யாழ். போதனா மருத்துவமனையில் கொரோனா தடுப்பு விடுதியில் தொற்றாளர்கள் 7 பேருக்கு சிசிக்சை வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களில் கர்ப்பவதிகள் இருவர் உள்ளடங்கலாக பெண்கள் நால்வரும் ஆண்கள் மூவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று (21) மட்டும் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் இந்த மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட 2 பேரும், 30 முதல் 59 இடைப்பட்ட இருவருமே தொற்றால் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 654 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களுக்கு சரக்கு ரயில் சேவைகள்
யாழ்ப்பாணத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகள் ரயில் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இரு நாள் பயணம் வந்துள்ள அமைச்சர், இன்று காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 'யாழ் ராணி' ரயிலில் பயணித்தார்.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாணம் மக்களை கருத்தில் கொண்டு அதிகளவான சேவைகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளோம்.
புதிதாக காங்கேசன்துறை - கிளிநொச்சி அறிவியல் நகருக்கு இடையிலான "யாழ் ராணி" சேவை , தடைப்பட்டிருந்த இரவு தபால் சேவை மீள ஆரம்பம். உத்தரதேவி மற்றும் கடுகதி சேவைகளின் தரிப்பிட நிலையங்களையும் அதிகரித்துள்ளோம்.
அத்துடன், யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளைப் பயன்படுத்த அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்குரிய திட்ட முன்மொழிவுகள் ரயில் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.
மேலும், முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் அநுராதபுர மாவட்ட பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களை கருத்தில் கொண்டு, ஓமந்தை - அறிவியல் நகர் புகையிரத சேவையை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அத்துடன், தடைப்பட்டுள்ள "ஸ்ரீதேவி" சேவையை மீள ஆரம்பிப்பதற்கு, பயணிகளின் ஆதரவை எதிர்பார்த்துள்ளோம். அதிகளவு பயணிகள் பயணிப்பார்கள் என்றால் அந்த சேவை மீளவும் ஆரம்பிக்கப்படும்.
இதேவேளை, பேருந்து, முச்சக்கர வண்டி உள்ளிட்ட தனியார் போக்குவரத்து சேவைகளின் கட்டண நிர்ணயத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேற்கொள்ளும். முச்சக்கர வண்டிகளின் கட்டண அறவீடு தொடர்பாக சட்டத்திருத்தமொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும். அதிகரித்த கட்டணத்தை அறவிடுவோர் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றார்.
லொறி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி
வவுனியாவில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மணியளவில் ஏ - 9 வீதியில் தேக்காவதை்தை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், ஆனந்தகுமார் கேதீஸ்வரன் (வயது 22) என்பவரே உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி கால்நடைகளுடன் பயணித்த லொறியுடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த லொறி கால்நடைகளை சட்டவிரோதமாக கொழும்புக்கு ஏற்றிச் சென்றது விசாரணைகளில் தெரிய வந்தது.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தண்டனையை பெற்றுத் தர ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் மனு சமர்ப்பணம்
இனத்தைப் படுகொலைக்கு உள்ளாக்கிய கோட்டாபயவையும் அவருடன் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தில் உள்ளவர்களையும் சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் (ஐ. சி. சி) நிறுத்தி தண்டனையை பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனு ஒன்றை ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை அழைத்து நேற்று (21) கூட்டம் இடம்பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டபோதே சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தன் நடராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பாக அனைவரின் ஏகோபித்த கருத்தாக ஜெனிவா கூட்டு நாடுகளுக்கு அனுப்புவதற்கு மனுவில் கையொப்பமிட்டு அனுப்புவதற்காக இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தோம்.
கடந்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி அனைவரும் ஒற்றுமையாக ஒரே குரலில் கோரிக்கைகளை முன்வைத்தது போல் இந்த தடவையும் இதை செய்வதற்கு நாம் முன்னெடுத்திருக்கின்றோம். அதில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கின்றோம்.
இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. நாங்கள் எழுதிய மனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனைய கட்சிகளும் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் அவர்கள் ஏற்றுக்கொண்டனரென வந்த பிரதிநிதிகள் கூறியிருக்கிக்கின்றார்கள். அதை தமது தலைமை பீடங்களுடன் கதைத்துத்தான் தமது இறுதி முடிவை அறிவிப்பார்கள்.
தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் மூலமாக மிகுதி விடயத்தை கொண்டு செல்ல எமக்கு கால அவகாசம் போதாமல் இருப்பதால், நாங்கள் இன்றோ (நேற்று - 21) நாளையோ (இன்று - 22) அவர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டாவது அவர்களின் அனுமதியை மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ, தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமாகவோ பெற்று நாங்கள் கூடிய விரைவில் அதை அனுப்பி வைப்போம். ஏனென்றால் காலம் போதியதாக இல்லை. இந்த அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து அந்த மனுவை அனுப்புவதாக உள்ளோம்.
அதைவிட இன்னொன்று தயார் செய்து வைத்துள்ளோம். அது சமூக அமைப்புகளும், பாதிக்கப்பட்ட தரப்பினருமாக சேர்ந்து அனுப்புவதற்காக, அதிலே நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக சர்வசன வாக்கெடுப்பு, கையகப்படுத்தப்பட்ட நிலம், அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், விகாரைகளை அகற்றல் என ஆறு விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றோம் என்று கூறினார்.
உரம் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பெரும்போகத்துக்கு தேவையான உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் சிறுபோக செய்கை முன்னெடுக்கப்படாத நிலையில் பெரும்போக செய்கை ஆரம்பமாகவுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் எம். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுபோகத்தில் நெல் செய்கைக்குத் தேவையான உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள், தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்திய கடன் வசதியின் கீழ் நாட்டிற்கு கிடைத்துள்ள 21,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை, தேயிலை மற்றும் இஞ்சி செய்கைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையூடாக, தேயிலை செய்கையாளர்களுக்கான உர விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது.
மாட்டைத் திருடியவர்களை வளைத்துப் பிடித்தனர் மக்கள்
திருட்டு மாட்டை கொண்டு சென்ற இருவர் தப்பியோடிய நிலையில், பொதுமக்கள் மாட்டை மீட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
மீசாலை வடக்கு எல்லை வீதியால் பசு மாடொன்றை இருவர் நடத்திக் கொண்டு செல்வதைக் கண்ட ஊரவர்கள் யாருடைய மாடு எங்கே? கொண்டு போகிறீர்கள்? என்று விசாரித்துள்ளனர்.
இந்நிலையில், மாட்டைக் கொண்டுவந்தவர் அவர்களுக்கு பதிலளிக்காமல் அதனை அங்கேயே விட்டுவிட்டு சைக்கிளில் வந்த மற்றவருடன் சேர்ந்து ஓடித் தப்பியுள்ளனர்.
மாட்டைப் பிடித்த ஊரவர்கள் அதனை கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்பு அந்த மாடு மந்துவிலை சேர்ந்த பெண்ணொருவருடையது என்று தெரிய வந்தது. அந்தப் பெண் சனிக்கிழமை காலை தனது மாட்டைப் பெறுவதற்காக சென்று காத்திருந்த நிலையில், மாலைவேளையே மாடு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாடுகள் தொடர்ந்து திருடப்படுவதால் அதிர்ச்சியடைந்துள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், திருட்டுகளை கண்டுபிடிப்பதில் பொலிஸார் அசண்டையீனமாக செயல்படுகின்றனர் என்று சாடியுள்ளதுடன், திருடர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)