பலவகைச் செய்தித் துணுக்குகள்

யாழில் அதிக டெங்கு நோயாளிகள்

வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 பேர் பலியாகியுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் 2,772 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதில் யாழ்ப்பாணத்தில் 2387 பேர் நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இது கடந்த இரண்டு ஆண்டுகளை விடவும் அதிகரித்த நிலையே காணப்படுகிறது.

இவ்வாண்டில் இது வரையான காலத்தில் 8 உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. எட்டு உயிரிழப்புக்களும் யாழ் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவத்தார்.


விவசாயத் திணைக்கள முறைகேடுகளின் விசாரணைக்கு ஆளுனரின் அதிரடி நடவடிக்கை

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு 3 பேர் கொண்ட குழுவை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா நியமித்துள்ளார்.
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளரான எஸ்.சிவகுமார் நிர்வாக நடைமுறைகளை மீறி நீண்ட காலம் செயற்பட்டிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தசாப்த காலத்திற்கு முன்னர் விவசாயப் பணிப்பாளராக க.சிவகுமார் நியமிக்கப்பட்டபோதும், அவரிலும் மூத்த அதிகாரிகள் கடந்தே அந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. அந்த நியமனம் அரசியல் செல்வாக்கு என அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கடந்த விவசாயப் பணிப்பாளரின் காலத்தில் விவசாய சேவை அதிகாரிகளில் பலருக்கும், அவருக்குமிடையில் சுமுகமான உறவிருக்கவில்லை. ஓரிருவரை தவிர மிகுதியான அனைவரும் மாகாண விவசாயத் திணைக்களத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இது வடக்கு விவசாய திணைக்களக் கட்டமைப்பில் நீண்டகால ரீதியில் பெரும் தாக்கத்தை செலுத்திருந்தது.

வடக்கு விவசாயத் திணைக்கள விவகாரம் தொடர்பில் முன்னாள் ஆளுநர்கள் சரேன் ராகவன், பி.எஸ்.எம். சாள்ஸ் போன்றவர்களிடம் பல தரப்பினர் சுட்டிக்காட்டிய போதும், அவர்கள் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.

எனினும், வடக்கின் தற்போதைய ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்த விவகாரத்தில் பல தரப்பு அழுத்தங்களையும் புறந்தள்ளி அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

வடக்கு விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், அமைச்சின் செயலாளர்களின் இடமாற்றத்தை தடுத்து நிறுத்த கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தலையீடு செய்திருந்தார். எனினும், அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் ஆளுநர் இந்த விடயத்தில் செயற்பட்டு, தனது முடிவை செயற்படுத்தியுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, வடக்கு விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் பணிமனையில் நடந்த நிதி, நிர்வாக முறைகேடுகளை ஆராய 3 பேர் கொண்ட ஆரம்ப புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் விஷ்ணு, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிர்வாக அதிகாரி சாந்தசீலன், வடக்கு மாகாண விதை உற்பத்தி கூட்டுறவு நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் சதீஷ் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் தொடர்பான சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த குழு ஆராயும் என கூறப்பட்டுள்ளது.



விபசார விடுதி பொலிஸாரால் சுற்றிவளைப்பு

வவுனியா தேக்கவத்தையில் விபசார விடுதி பொலிஸாரால் நேற்று முற்றுகையிடப்பட்டது. இதன்போது இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அங்கிருந்து ரி 56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது விடுதியிலிருந்து இரு பெண்கள், விடுதி முகாமையாளரான ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி - 56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விடுதி பணி ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்க்கு உரியது என்றும், கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

பளை‌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (18) வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது.

பின் குறித்த நபரின் வீட்டில் தேடுதலில் ஈடுபட்ட போது 910 கிராம் வெடிமருந்து கழற்றிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளும் நல்ல நிலையில் மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

குறித்த நபரை கைது செய்த பளை பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.


அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை - ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் பாராளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியாக இந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்தோம்.

பாராளுமன்றத்தை பலப்படுத்தி அதனூடாக செயற்படுவேன் என ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதனை வன்மையாக கண்டிக்கிறோம். எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எமது கட்சி ஆதரவை வழங்குமே தவிர கட்சியிலிருந்து எவரும் செல்லமாட்டார்கள் என்றார்.


எதிரணியிலிருந்து 20 பேருக்கு மேல் அரசுடன் இணைவதற்கு இணங்கினர் - உறுதிப்படுத்தினார் வஜிர அபேவர்தன

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியிலிருந்து 20 இற்கும் மேற்பட்டோர் அரசுடன் இணைய இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளனர். அவர்களுள் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர்." இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது;

எதிரணியில் இருந்து வரும் உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு பலமான அரசை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறுவவுள்ளார்.

அந்த அரசுக்கு சர்வகட்சி அரசு, சர்வகட்சி ஆட்சி, தேசிய அரசு ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனவே, பலமிக்க அரசுக்கு இந்த மூன்று பெயர்களில் ஒரு பெயரை அதில் அங்கம் வகிக்கவுள்ள உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஜனாதிபதி சூட்டுவார்.
அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அசைக்க முடியாத அரசை நிறுவுவதே ஜனாதிபதியின் விருப்பம். இதற்காகப் பல கட்சிகளை அவர் தனித்தனியே சந்தித்தும் பேச்சு நடத்தியுள்ளார். எனினும், சில கட்சிகள் இழுத்தடிப்புக்களைச் செய்கின்றன. சர்வ கட்சிகளை உள்ளடக்கிய தேசிய வேலைத்திட்டத்துக்குக்கூட சில கட்சிகள் நிபந்தனைகளை விதிக்கின்றன.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் சிக்குண்ட நாட்டை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இது கட்சி அரசியல் செய்யும் நேரமல்ல.
எனவே, காலத்தை வீண்விரயம் செய்யாமல் சேர விரும்பும் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு பலமிக்க அரசை நிறுவி பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகளைக் காணும் பயணத்தை ஜனாதிபதி உடனடியாக ஆரம்பிக்கவுள்ளார்" என்றார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY