
posted 10th August 2022
சண்டியன் போல் செயற்படும் வடக்கு மாகாண ஆளுநர்
நிர்வாகம் தெரியாத வடக்கு மாகாண ஆளுநர் சரம் கட்டிய சண்டியன் போல் செயற்பட்டு வருகின்றார்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், வடக்கு ஆளுநர் மீது சரமாரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்தார்.
"ஜீவன் தியாகராஜா எனப் பெயர் இருந்தாலும் வடக்கு ஆளுநருக்குத் தமிழ் தெரியாது. அவர் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார். அதிகாரிகளை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்து, காட்டுத் தர்பார் நடத்துகின்றார்.
திட்டமிட்ட அடிப்படையில்தான் அவர் தமிழர் பகுதிக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிழக்கு ஆளுநரும் அப்படித்தான். இவர்களிடம் முறையிட்டுப் பயன் இல்லை" என்றார்.
கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவிற்கு யாழிலிருந்து விசேட பஸ் சேவை
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபை விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளது.
இந்த விசேட பேருந்து சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை முகாமையாளர் குணசீலன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 5 .15 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்படும் எனவும், கதிர்காமம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட் தொற்றால் மேலும் ஒருவர் மரணம்
வவுனியாவில் மீண்டும் கோவிட் தொற்று காரணமாக ஒருவர் மரணமடைந்தார் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மூச்சு திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மரணமடைந்தவர் செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயது நபர்
என்று சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் வாள்வெட்டு
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (09) மாலை நுழைந்த வன்முறைக் கும்பலொன்று நடாத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதன் கிழமை (10) முதல் மின்சார கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிப்பு
இன்று புதன்கிழமை முதல் மின்சார கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
புதிய மின்கட்டண உயர்வின்படி, முதல் 30 அலகுகளுக்கு 264 வீதமும், 31 60 வரையான அலகுகளுக்கு 211 வீதமும் 61 90 வரையான 125 வீதமும், 91 - 120 வரையான அலகுகளுக்கு 89 வீதமும் 121 - 180 வரையான அலகுகளுக்கு 79 வீதமும் கட்டணங்கள் அதிகரிக்கின்றன.
இலங்கை மின்சார சபை 183 வீதம், 229 வீதமான கட்டண உயர்வுகளை கோரிய போதும் சராசரியாக 75 வீதமான கட்டண உயர்வுக்கே அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, 2013 ஆம் ஆண்டின் பின்னர் - 9 ஆண்டுகளின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது என்றும் தெரவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)