
posted 8th August 2022
உதவி அரசாங்க அதிபராக, திட்டமிடல் பணிப்பாளராக , அரசாங்க அதிபராக , வடக்கு மாகாண பிரதம செயலாளராக, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அரச சேவையில் முப்பது வருடங்களாக சேவையாற்றி தனது அறுபதாவது யூபிலி விழாவில் தடம் பதித்த நிலையில் தனது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ள மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த அ. பத்திநாதன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவரின் சேவை காலங்களில் இவர் சேவை செய்த இடங்களில் எல்லாம் பல அபிவிருத்தி பணிகளையும், சமூகப் பணிகளையும் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தவராவார்.
அத்துடன் இவர் 306 பி லயன்ஸ் கழக மன்னார் மாவட்டத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருந்த காலத்தில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த தலைமன்னார் பியர் பகுதியில் அனைத்து மதங்களும் கொண்ட அங்கிருந்த மாணவர்களுக்கு அன்றைய காலத்தில் அரசோ அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களோ மூலம் உதவிகள் கிட்டாத வேளையில் மன்னார் லயன்ஸ் கழக உறுப்பினர்களுடன் இணைந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு தூணாக திகழ்ந்தவர்.
இவர் தனது அரச சேவையிலும் சமூகப் பணியின் மூலமும் செய்த சேவையின் காரணமாக இவருடன் இணைந்து சேவையாற்றியவர்கள் நன்மை அடைந்த சமூகத்தினர் இணைந்தே இவருக்கு இந்த சேவை நலன் பாராட்டு விழாவை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இவரின் சேவை நலன் பாராட்டு விழா எதிர்வரும் 13 ந் திகதி (13.08.2022) சனிக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் ஆகாஷ் ஹொட்டலில் நடைபெற இருப்பதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)