
posted 1st September 2022
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான செவ்வாய்க் கிழமை (30) வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பரவலாகப் போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்தப் போராட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும், தமக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தினர்.
யாழ்ப்பாணத்தில்
யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நாவலர் வீதியிலுள்ள யூ. என். எச். சி. ஆர். பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
கிளிநொச்சியில்
கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனவீர்ப்பில் ஈடுபட்டனர்.
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு, தமது பிள்ளைகளின் புகைப்படங்களையும் ஏந்தி தமது உறவுகளுக்காக நீதி கோரினர்.
முல்லைத்தீவில்
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பகுதியில், ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 2000 நாட்களை 30.08.2022 அன்று எட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமலையில்
திருமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், திருகோணமலை பிரதேச செயலகம் முன்பாக நடத்தினர். அத்துடன், பேரணி ஒன்றையும் அவர்கள் முன்னெடுத்தனர்.
வவுனியாவில்
வவுனியாவில், குடியிருப்பு பிள்ளையார் ஆலயம் அருகாக ஆரம்பித்த பேரணி வவுனியா நகரத்தை அடைந்து பழைய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.
மட்டக்களப்பில்
மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பேரணி, காந்தி பூங்காவில் ஆரம்பமாகி பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து தந்தை செல்வா சதுக்கத்தில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்றவர்கள் சர்வதேச நீதியை வலியுறுத்தினர்.
மன்னாரில்
மன்னாரில், மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பஜார் வீதி ஊடாக மன்னார் பிரதான சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றனர். சர்வதேச விசாரணையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களின் புகைப்படங்களையும் தாங்கியவாறு பேரணியாக சென்றனர்.
அம்பாறையில்
அம்பாறை - திருக்கோவிலில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அம்பாறை அலுவலகம் முன்பாக ஆரம்பமான பேரணி, மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)