
posted 17th August 2022
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் சிறுவர் செயலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஏழு நாட்கள் கொண்ட பயிற்சிப்பட்டறை வார இறுதி நாட்களில் மண்முனை வடக்குப் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான 14.08.2022 அன்று இடம் பெற்ற செயலமர்வின் போது முன்பள்ளிப் பிள்ளைகளின் கணிதத் திறன்களையும், தர்க்கரீதியான சிந்தித்தலையும் மற்றும் சூழல்சார் விழிப்புணர்வையும் விருத்தி செய்தல் தொடர்பான விடயங்கள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.
பயிற்சிப்பட்டறைக்கு வளவாளர்களாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக முன்பிள்ளைப்பருவ பராமரிப்புக்கும், அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் முத்துராஜா புவிராஜா மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருச்செல்வம் மேகராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். உள்ளக பயிற்சிகளுடன், வெளிக்கள ஆராய்வுப் பயிற்சிகளும் இடம்பெற்றன.
இம் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்றிட்டமானது மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் தேசிய ரீதியில் அனைத்து பிரதேச செயலகங்களினூடாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)