
posted 19th August 2022
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த நோயாளர் பராமரிப்புக்குரிய ஒரு தொகுதி உபகரணங்கள், தனவந்தர் ஒருவரின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலை சமூகத்தின் வேண்டுகோளையேற்று மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த பட்டயக் கணக்காளர் எம்.வை.எம். இப்றாஹிம் என்பவரே இவற்றைக் கொள்வனவு செய்து வழங்கியுள்ளார்.
இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.கே. சனூஸ் தலைமையில் இடம்பெற்றபோது கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம். சதாத் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கணக்காளர் எம்.வை.எம். இப்றாஹிம் அவர்களின் மனிதாபிமான சேவைக்கு வைத்திய அதிகாரிகளினால் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)