
posted 29th August 2022
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் அதன் பெயர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டமை நியாயமானதே என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
அண்மையில் இது பற்றி கல்முனை தமிழ் மக்கள் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டுள்ள பிரசுரம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கக்கூடிய வகையில் உப பிரதேச செயலகம் 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ஒரு தனியான பிரதேச செயலகம் அல்ல, மாறாக உப செயலகமாகும்.
ஆனால் யுத்த காலத்தில் இதற்கான பெயர் கல்முனை தமிழ் செயலகம் என்றும், கல்முனை தமிழ் வடக்கு செயலகம் என்றும் சிலரால் அழைக்கப்பட்டது. இவ்வாறு அழைப்பதற்கான எந்தவொரு அரச வர்த்தமாணி அறிவித்தலும் இல்லை.
மேலும் 1993.09.03 ஆம் திகதி கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்ததாகவும் அதையும் அரசியல்வாதிகள் தடுத்ததாக தமிழர் தரப்பில் உன்மைக்குப் புறம்பாக கூறப்படுகின்றது.
1993.09.03 ல் 28 உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 27 வது இடத்தில் கல்முனை (தமிழ் பிரிவு) உப செயலகம் என அரசியலமைப்புக்கு மாற்றமாக இனரீதியான பெயரும், நிர்ணயம் செய்யப்பட்ட எல்லையும் இல்லாததால் இது அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டது. ஏனைய 27 உப பிரதேச செயலகங்களும், பிரதேச செயலகங்களாக அங்கிகரிக்கப்பட்டன. இதை விளங்காமல் முஸ்லிம்கள் மீது பழி போடுவது அறிவீனமாகும்.
அன்றைய அரசாங்கங்களுக்கு யுத்தமே பெரிய விசயமாக இருந்ததால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யுத்தம் முடிந்ததும் சிங்கள அரசுடன் சான்டை பிடித்து தோற்ற சில இனவாத தமிழர்களுக்கும், தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் தமிழ் கட்சிகளுக்கும் யாராவது புதிய எதிரி தேவைப்பட்டது. அத்தகைய எதிரிகளாக கல்முனை முஸ்லிம்கள் சித்தரிக்கப்பட்டு கடந்த நல்லாட்சிக்காலத்தில் இது விடயம் பெரிதாக்கப்பட்டு ஒற்றுமையாக வாழும் கல்முனைத்தொகுதி முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையில் இன முறுகல் ஏற்படுத்தப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக கல்முனையில் பௌத்த சமய குருவுடன் சேர்ந்து தமிழ் அரசியல்வாதிகளும் உண்ணாவிரதம் இருந்தனர். அதே போல் இந்நிகழ்வுக்கு இனவாத ஞானசார, ரதன தேரர் ஆகியோர் வந்ததன் மூலம் கல்முனையை குழப்பி இங்கு முஸ்லிம், தமிழ் முறுகலை ஏற்படுத்த முயற்சிக்கும் பேரினவாதிகளின் தூண்டுதலே இந்த பிரதேச செயலக பிரச்சினை என்பது தெளிவாகியது.
இப்போது நாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் நாட்டை குழப்புவதற்காக கல்முனையில் உள்ள சில தமிழ் இனவாதிகள் மீண்டும் இப்பிரச்சினையை தூக்கி இனவாதமான பிரசுரங்களை வெளியிடுகின்றனர்.
கல்முனையில் முஸ்லிம்கள் 70 வீதமும் தமிழர்கள் 30 வீதமும் உள்ளனர். ஆனாலும் 70 வீத முஸ்லிம்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவும், 30 வீத தமிழர்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவும் வழங்கப்பட்டுள்ள அநியாயம் நடந்தேறியுள்ளது. இதனை தடுக்க முடியாத கையறு நிலையில் தூங்கிக்கொண்டிருந்தது கல்முனையை ஆளும் முஸ்லிம் காங்கிரசும் அதன் எம் பி ஹரீசும், கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமுமாகும்.
கல்முனையை இனரீதியாக பிரிக்க கூடாது என்பதே எமது கட்சியின் கோரிக்கையாகும். கல்முனையில் 99 வீதம் தமிழர்கள் வாழும் பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை இணைத்து " பாண்டிருப்பு செயலகம்" வழங்க வேண்டும் என்பதே எமது கட்சி முன் வைக்கும் தீர்வாகும். இந்தத்தீர்வை தமிழ் தரப்பு ஏற்று கல்முனையை இன, மத ரீதியில் பிரிக்காமல் பாண்டிருப்பு என்ற பிரதேச ரீதியில் பிரித்து தமிழ் மக்களுக்கும் ஒரு செயலகம் கிடைக்கப்பெற்று தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்த முன் வரவேண்டும் என உலமா கட்சி (ஐக்கிய காங்கிரஸ் கட்சி) கேட்டுக்கொள்கிறது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)