
posted 25th August 2022
நிந்தவூர் கடலரிப்பை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெற்று அறிக்கைகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றாதீர்கள். உங்களால் முடியா விட்டால் இராஜினாமா செய்யுங்கள். இக்கடலரிப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான், அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
அம்பாரை மாவட்ட கரையோரப் பகுதி எங்குமே இந்த கடலரிப்பு பிரச்சினை ஏற்பட்ட வண்ணமே உள்ளது. நீண்ட காலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
கடலரிப்பு உச்சம் தொடும்போது மட்டும் அறிக்கைகள் விடுவதும் அவர் இவருடன் பேசினோம் என்று செய்தி வெளியிடுவதும் எமது பாராளுமன்ற உறுப்பினர்க வழக்கமாகிப் போய்விட்டது.
கட்சி பேதங்களைத் துறந்து அம்பாரை மாவட்ட அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு தீர்க்கமான நிரந்தர முடிவை எடுங்கள். ஜனாதிபதியை சந்தித்து, உடன் நடவடிக்கை எடுங்கள். இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக தீர்வை காணுங்கள்.
உங்களால் முடியா விட்டால் எம்.பி பதவிகளைத் துறந்து வீடு செல்லுங்கள். இந்த கடமையை நாங்கள் பொறுப்பேற்கிறோம்.
அம்பாரை மாவட்ட கரையோரப் பகுதிகளில் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் அரைகுறையாகவே நடந்துள்ளன. எந்தவொரு திட்டமும் பூர்த்தியடைந்ததாக இல்லை. அவ்வாறுதான் இந்த கடலரிப்பு விவகாரமும் நகர்த்தப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)