டீசலின் பற்றாக்குறையால் மட்டுப்படுத்தப்பட்ட சேவை

டீசல் பற்றாக்குறை நீடித்து வருவதன் காரணமாக, கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. இந்நிலைமையை புரிந்து கொண்டு, செயற்படுமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

நாட்டில் கடந்த பல மாதங்களாக நிலவி வருகின்ற பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வுகள் காணப்பட்டு வருகின்ற போதிலும், அதன் ஊடாக பெற்றோல் தட்டுப்பாடு ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டிருந்தாலும் டீசல் தட்டுப்பாடு என்பது நாடு முழுவதிலும் இன்னும் நீடித்தே வருகின்றது.

இதற்கு மத்தியில் QR Code முறைமை அமுல்படுத்தப்பட்டு வருவதால், கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்களுக்கு போதியளவு டீசலை பெற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுகின்ற 27 வாகனங்களுக்கும் வாராந்தம் சுமார் 2000 (இரண்டாயிரம்) லீட்டர் டீசல் தேவையாக இருக்கிறது. எனினும் QR Code முறைமையின் கீழ் இவ்வாகனங்களுக்கு 540 லீட்டர் மாத்திரமே டீசல் கிடைக்கிறது. இதன்படி வழமையான சேவையுடன் ஒப்பிடுகையில் தற்போது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியளவிலான சேவையையே முன்னெடுக்க முடியுமாக இருக்கிறது.

இந்த QR Code முறைமைக்கப்பால் போதியளவு டீசல் தருவதற்கு எமக்குரிய எரிபொருள் நிரப்பு நிலையம் முன்வருவதாக இல்லை. ஏனெனில் QR Code முறைமையை மீறி செயற்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படுகிறது.

இப்பிரச்சினை குறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் பல தடவைகள் பேசியும் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் இதனைக் கொண்டு சென்றுள்ளோம். QR Code முறைமையில் இருந்து விலக்களிக்குமாறு கோரி தற்போது எரிசக்தி அமைச்சு மட்டத்திலும் பேசி வருகிறோம்.

இந்நிலையில், எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் வரை எமது திண்மக்கழிவகற்றல் சேவையை மட்டுப்படுத்தி முன்னெடுப்பதென்பது தவிர்க்க முடியாத விடயமாகும். இந்த அசாதாரண நிலைமையை பொது மக்கள் புரிந்து கொண்டு, ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

அதேவேளை, கடந்த கால கொரோனா பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் மாநகர சபைக்கான வருமானம் பாரியளவில் வீழிச்சியடைந்துள்ளதால் ஏற்பட்டிருக்கின்ற நிதிப்பற்றாக்குறை ஒருபுறம், எரிபொருள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் கடுமையான விலை அதிகரிப்பு இன்னொரு புறம், இவற்றுக்கு மத்தியிலேயே பெருந்தொகை செலவுகளை மேற்கொண்டு, திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுத்து வருகின்றோம் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டீசலின் பற்றாக்குறையால் மட்டுப்படுத்தப்பட்ட சேவை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)